புதுடெல்லி: கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழ் அகதிகள், செல்லுபடியாகும் கடப்பிதழ்கள், பயண ஆவணங்கள் அல்லது விசா இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்குத் தண்டனை விதிப்பிலிருந்து இந்திய உள்துறை அமைச்சு விலக்கு அளித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவிற்கு வந்து இந்திய அரசிடம் சட்டபூர்வமாக அனுமதி பெற்ற இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அண்மையில் அறிவிக்கப்பட்ட குடிநுழைவு, வெளிநாட்டினர் சட்டத்தில் இடம்பெற்றுள்ள தண்டனை விதிகளிலிருந்து இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இயற்றப்பட்ட குடிநுழைவு, வெளிநாட்டினர் சட்டம் 2025, கடப்பிதழ் அல்லது செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டினர் நுழைவதையும் தங்குவதையும் தண்டனைக்குரிய குற்றமாக வகைப்படுத்துகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூ. 5 லட்சம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
முன்னதாக, 2015 ஜனவரி 9க்கு முன்னர் இந்தியாவில் அடைக்கலம் புகுந்த மற்றும் தாமாக முன்வந்து இலங்கை திரும்ப விரும்பும் இலங்கை அகதிகளுக்கு, விசா கட்டணத்தையும் விசா இன்றி நீண்ட காலம் தங்கியிருந்ததற்கான அபராதத்தையும் உள்துறை அமைச்சு தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 2ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட மற்றொரு உத்தரவில், சமயத் துன்புறுத்தலைத் தவிர்ப்பதற்காக 2024ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிவரை இந்தியா வந்த ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகத்தினர் கடப்பிதழ் அல்லது பிற பயண ஆவணங்கள் இல்லாமல் அந்நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நடப்புக்கு வந்துள்ள புதிய குடிநுழைவு, வெளிநாட்டினா் சட்டத்தின்கீழ் நேப்பாளம், பூட்டான் நாடுகளிலிருந்து நிலம் அல்லது வான்வழியாக இந்தியா செல்வதற்கு அந்த நாட்டு மக்களுக்கும் இந்தியக் குடிமக்களுக்கும் செப்டம்பர் 1 முதல் கடப்பிதழ் அல்லது விசா தேவை இல்லை.
எனினும் சீனா, ஹாங்காங், பாகிஸ்தானிலிருந்து வரும் நேப்பாளம், பூட்டான் மக்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.