3 ஆண்டுகளாக முடக்கம்: தமிழகத்தில் பல லட்சம் டன் அரிசி வீணாகும் நிலை

3 ஆண்டுகளாக முடக்கம்: தமிழகத்தில் பல லட்சம் டன் அரிசி வீணாகும் நிலை

படம்: இந்து தமிழ் திசை

05 Nov 2026 - 9:25 pm

2 mins read

சென்னை: தமிழ்நாட்டில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள பல லட்சம் டன் எடையுள்ள அரிசி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழகச் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் முடங்கியுள்ள அரிசி யாருக்கும் பயன்படாமல் போகும் நிலையில் உள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவுக் கழகம், நாடு முழுவதும் நெல், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு தானியங்களைக் கொள்முதல் செய்து மாநிலங்களின் தேவைக்கேற்ப வழங்கி வருகிறது.

அந்தக் கழகம் கிலோ அரிசி ரூ.39.10க்கு மாநிலங்களிடம் விற்று வருகிறது.

அந்த அரிசி தரமானது என்பதால், பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டங்கள், சிறைகள் மற்றும் அரசு மாணவர் விடுதிகளுக்கு இந்திய உணவுக் கழகத்திடம் இருந்தே தமிழக அரசு அரிசியைக் கொள்முதல் செய்து வழங்குகிறது.

பேரிடர் மற்றும் வறட்சி காலங்களில் மக்களுக்கு வழங்குவதற்காகவும் மாநில அரசுகளின் தேவைக்கு வழங்குவதற்காகவும் பல லட்சம் டன் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களை இந்திய உணவுக் கழகம் சேமித்து வைத்துள்ளது.

தனது சொந்தக் கிடங்குகள், மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகள், தமிழக அரசின் சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றில் அந்தத் தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

சென்னை, விழுப்புரம், திருச்சி, கடலூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் அரிசிக்கு, மூட்டைக்கு ரூ.5.39 வீதம் கிடங்கு நிறுவனங்களுக்கு இந்திய உணவுக் கழகம் மாதக் கட்டணமாக வழங்குகிறது.

ஆனால், சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் அவை வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சேமிப்புக் கிடங்கில் மட்டும் 28,000 டன் அரிசி, தமிழக அரசின் சேமிப்புக் கிடங்கில் 6,300 டன் அரிசி என மொத்தம் 34,300 டன் அரிசி, மூன்றாண்டுகளுக்கு முன்பு இருப்பு வைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேபோல, தமிழகம் முழுவதும் பல லட்சம் டன் அரிசி மூன்று ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

குறுவை, சம்பாப் பருவம் பொய்த்து அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அரிசி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக பல லட்சம் டன் அரிசி யாருக்கும் பயன்படாமல் வீணாகுவது வேதனை அடையச் செய்துள்ளது என்று அந்த விவகாரம் பற்றி அறிந்தவர்கள் ‘இந்து தமிழ் திசை’ செய்தித்தாளிடம் கூறினர்.

குறிப்புச் சொற்கள்