சுவா: பிஜி நாட்டில் வாழும் தமிழக வம்சாவளியினரின் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியை கற்பிக்கும் திட்டம் இந்திய அரசு நிதியுதவியுடன் புதன்கிழமையன்று (நவம்பர் 27) தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தை பிஜி நாட்டுக்கான இந்திய தூதர் பி.எஸ். கார்த்திகேயன் தொடங்கிவைத்தார்.
அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் நடத்திவரும் ‘சங்கம்’ என்ற அமைப்பை நிர்வகிக்கும் பள்ளியில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிஜி கல்வி அமைச்சுடன் தென்னிந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.
இதன்படி இந்தியாவிலிருந்து இரு தமிழ் ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் ராக்கிராக்கியில் உள்ள ஒரு பள்ளியிலும் லபாசா என்ற பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியிலும் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படும்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நிதியுதவியையும் மத்திய அரசு வழங்குகிறது.
“கலாசாரத்தைப் பாதுகாப்பதிலும் பல்வேறு சமூகங்களுக்கிடையில் அதிக புரிதலை வளர்ப்பதிலும் மொழியின் பங்கு இன்றியமையாதது. எட்டு கோடிக்கும் அதிகமானோரால் பேசப்படும் துடிப்புமிக்க உலகளாவிய மொழியான தமிழின் வளமான கலாசாரத்தையும் மொழியின் பாரம்பரியத்தையும்தன் தொன்மை மாறாமல் கடைபிடிப்பது மிகவும் முக்கியம். தமிழ் மொழியைக் கற்கும் வாய்ப்பை தமிழர்களும் மொழி ஆர்வலர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என இத்திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய இந்திய தூதர் பி.எஸ். கார்த்திகேயன் கூறினார்.

