புதுடெல்லி: சிங்கப்பூர், இந்தியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ) மூன்று நாடுகளும் இணைந்து கடலடி கம்பிவடத் தடத்தை அமைக்கவுள்ளன.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் மின்னிலக்கமயமாக்கல் திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்தை மேற்கொள்ளும் அதன் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான ‘டு’ (du), சிங்கப்பூர், இந்தியாவுடன் உடன்படிக்கை செய்துள்ளது.
இந்த அடுத்த தலைமுறை கடலடி கண்ணாடியிழைக் கட்டமைப்பானது, மத்திய கிழக்கு, தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றை இணைக்கும்.
இந்த ஒப்பந்தம், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் வட்டாரத் தரவு மையமாகும் அதன் இலக்கினை உறுதிப்படுத்துகிறது. அத்துடன், எதிர்கால மின்னிலக்க வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு, அனைத்துல இணைப்பு ஆகியற்றுக்கு அது ஆதரவளிக்கும்.
சிங்கப்பூர்-இந்தியா-மத்திய கிழக்கு கம்பிவட அமைப்பு என்பது உயர்தர, அதிவேகக் கடலடி கண்ணாடியிழைக் கம்பி அமைப்பு ஆகும். இது, சிங்கப்பூர், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஓமானின் மஸ்கட், இந்தியாவின் மும்பை, சென்னை, மலேசியாவின் கெடா ஆகிய ஆறு முக்கியமான இடங்களை இணைக்கும் நோக்கில் உருவாக்கப்படுகிறது.
இந்த அமைப்பு உயர்திறன், அதிவேக இணைப்பு போன்றவற்றுடன் செங்கடல் பாதை போன்ற பாரம்பரிய பாதைகளுக்கு அப்பால் தரவுப் பாதைகளைப் பன்முகப்படுத்துவதன் மூலம் தொடர்புக்கட்டமைப்பின் மீள்திறனை வலுப்படுத்துகிறது. உலகளாவிய அலைக்கற்றை தேவைகளை ஆதரிப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கும்.
வரும் 2030க்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படும் இக்கட்டமைப்பு செயல்படத் தொடங்கியதும், வினாடிக்கு பல டெராபிட் சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வணிகங்கள், கிளவுட் நடத்துநர்கள் (cloud operators), செயற்கை நுண்ணறிவு ஆய்வு முயற்சிகள், கண்டங்களுக்கிடையிலான தளங்களின் எதிர்காலத் தரவுப் பரிமாற்றங்களை எளிதாக்கும்.


