'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: சிங்கப்பூரிலிருந்து சென்ற ஆடவர் சென்னை விமான நிலையத்தில் கைது

1 mins read
b754b9cc-f66d-4cfa-b195-f8b2fca80c43
சென்னை அனைத்துலக விமான நிலையம். மாதிரி படம்: ஊடகம் -

'நீட்' எனப்படும் இந்தியாவின் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர், சிங்கப்பூரில் இருந்து சென்னை சென்றபோது, விமான நிலையத்தில் காவலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த சம்பவம் தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்த மாணவரும் அவரது தந்தையும் முதலில் கைது செய்யப்பட்டனர்.

அது தொடர்பான விசாரணையில் இதுவரை 5 மாணவர்கள், அவர்களின் பெற்றோர், இடைத்தரகர் ஒருவர் என 16 பேர் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வதற்கு முக்கிய இடைத்தரகர்களாகச் செயல்பட்டதாக கேரளாவைச் சேர்ந்த ரஷீத், மோகன் ஆகியோரை சிபிசிஐடி போலிசார் தேடி வந்தனர். அதில் ரஷீத் கடந்த மாதம் தேனி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

மற்றொருவரான மோகன் சிங்கப்பூரில் இருந்தது தெரியவந்தது. அவரைப் பிடிக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி சார்பில் 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருந்தது. மோகன் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை சென்னைக்கு சென்றபோது அதிகாரிகள் அவரை விமான நிலைய அறை ஒன்றில் காவலில் வைத்து, சிபிசிஐடி அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.

அதனையடுத்து, அங்கு சென்ற சிபிசிஐடி அதிகாரிகள் மோகனைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்