காவிரி போராட்டம் கர்நாடகாவில் தீவிரம்: பாஜகவும் களமிறங்கியது

2 mins read
7569833b-a385-4086-ab3b-3ca6c769373f
காவிரி நீரை தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்து ஐந்து நாள்களுக்கும் மேலாக போராட்டம் நீடிக்கிறது. - படம்: இந்திய ஊடகம்

மாண்டியா: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடுவதற்கு எதிராக கர்நாடகத்தில் நடைபெறும் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் படி தமிழ்நாட்டுக்கு வெறும் 5,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பாசனத்துக்கு போதுமானது இல்லை. ஆகையால் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 24,000 கன அடி நீரைத் திறக்க வேண்டும் என கோரி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை சொற்ப அளவில் கர்நாடகா கடந்த சில நாள்களாகத் திறந்துவிட்டு வருகிறது.

மாண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்), மைசூரின் கபினி அணைகளில் இருந்து இந்த நீர் திறக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என ஐந்து நாள்களுக்கும் மேலாக கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. பெங்களூருவில் தொடங்கிய பேரணி ஸ்ரீரங்கப்பட்டனத்தில் உள்ள கேஆர்எஸ் அணை அருகே முடிவடைந்தது.

இதற்கிடையே, கருநாடு சேவகரா பாடே என்னும் அமைப்பின் தலைவர் லோகேஷ் கவுடா, குடிநீருக்கு காவிரி நீரை நம்பி இருக்கும் அனைவரும் போராட்டத்தில் குதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

காவிரியில் நீர் திறந்துவிடப்படுவதற்கு எதிரான போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக மாநில எதிர்க்கட்சியான பாஜகவும் இந்தப் போராட்டத்தில் இறங்கி உள்ளது. மாண்டியாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

போராட்டம் நீடிப்பதால் பதற்றமும் நீடிக்கிறது.

குறிப்புச் சொற்கள்