உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

2 mins read
1e445b2a-7d7e-49c0-991d-f57a6e8679db
டிசம்பர் மாதம் பெய்த மழையால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் கனமழை பெய்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் கடுமையான பாதிப்புகளும் சேதங்களும் ஏற்பட்டன.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாதிப்பு குறித்து விரிவாக கடிதம் எழுதி கிட்டத்தட்ட 30,000 கோடிக்கு மேல் நிவாரணம் கேட்டிருந்தார். ஆனால் மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை.

தற்போது மக்களவைத் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரத்தின் போது வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசா கூட தரவில்லை என மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

வேலூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசினார். அப்போது இது தொடர்பாக மத்திய அரசு மீது வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் மாதம் பெய்த மழையால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

அதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் எதிர்பாராத வகையில் மழைபெய்தது. 

தாமிரபரணி ஆற்றில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றின் கரையோர கிராமங்கள் மிகப்பெரிய அளவில் பாதித்தன. வீடுகள் பல மூழ்கின. 

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் வடிய பல நாள்கள் ஆகியது என்று இந்திய ஊடகங்கள் கூறியிருந்தன. 

குறிப்புச் சொற்கள்