புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் கிழக்குப் பகுதியில் உள்ள சிறுவர் மருத்துவமனையில் சனிக்கிழமை (மே 25) பின்னேரம் மூண்ட தீயில் புதிதாகப் பிறந்த ஏழு சிசுக்கள் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவேக் விகார் குழந்தைப் பராமரிப்பு நிலையத்திலிருந்து, புதிதாகப் பிறந்த 12 சிசுக்கள் மீட்கப்பட்டதாகவும் ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஏழு குழந்தைகள் மாண்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
உள்ளூர் நேரப்படி இரவு 11.32 மணிக்கு விவேக் விகார் நிலையத்திலிருந்து உதவி கோரி அழைப்பு வந்ததாகத் தீயணைப்புத் துறை தெரிவித்தது.
உடனடியாகத் தீயணைப்பு வண்டிகளும் வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
விவேக் விகார் நிலையக் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து 12 சிசுக்கள் மீட்கப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்தது.
முன்னதாக, ஆறு சிசுக்கள் மூச்சுத் திணறி மாண்டதாகவும் மேலும் ஒரு சிசுவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் டெல்லி சுகாதார அமைச்சர் சௌரப் பரத்வாஜ் கூறியதாக இந்திய ஊடகமான ஏஷியன் நியூஸ் இன்டர்நேஷனல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
சிசுக்களைப் பறிகொடுத்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் எந்தவோர் அதிகாரியும் இத்தகைய கவனக்குறைவில் செயல்படாது இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தீ மூண்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், விவேக் விகார் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளரான டாக்டர் நவீன் தலைமறைவாகிவிட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, சிறுவர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீச்சம்பவம் மிகவும் கவலை அளிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
“தீச்சம்பவத்துக்கான காரணம் விசாரிக்கப்படுகிறது. இந்தக் கவனக்குறைவான செயலுக்குப் பொறுப்பானவர்கள் விட்டுவைக்கப்படமாட்டார்கள்,” என்று அவர் ‘எக்ஸ்’ சமூகத் தளத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையே, குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் உள்ள கேளிக்கைப் பூங்கா ஒன்றில் தீ மூண்டதில் 28 பேர் மாண்டனர்.
அதிகமானோர் கூடியிருந்த அவ்விடத்தில் தீ மூண்டதுடன் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் திரௌபதி முர்முவும் இத்தீச்சம்பவம் தொடர்பில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

