பனாஜி: கோவாவில் இருக்கும் கந்தேபர் என்ற இடத்தில் வியாழக்கிழமை பிற்பகல் நடந்த விபத்தில், சாலையைக் கடக்க முயன்ற பாதசாரிமீது பத்து சக்கரங்கள் பொருத்தப்பட்ட லாரி ஒன்று மோதியது. மோதிய வேகத்தில் கீழே விழுந்த அந்தப் பாதசாரியின் தலைக்குக் கீழ் இருக்கும் உடல் பகுதிமீது லாரி ஏறி இறங்கியது. இதில், அவரின் தலை துண்டானது. மேலும், அவரது தலையை சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இடத்தில் காவல்துறை கண்டெடுத்தது.
இந்த விபத்து குறித்தும் ஒருவர் உயிரிழந்தது குறித்தும் அந்த லாரி ஓட்டுநருக்குத் தெரியவில்லை என்றும் இறந்தவரின் தலை லாரியின் சக்கரங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியில் சிக்கியிருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்காணிப்புக் கருவி உதவியுடன் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். உஸ்காவ் ரப்பர் தொழிற்சாலை வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தைக் காவல்துறையினர் கண்டு அந்த ஓட்டுநரிடம் விபத்து குறித்து விசாரித்தபோது தான் அவருக்கு இதுகுறித்து தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்து குறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த 66 வயதான அந்த லாரி ஓட்டுநரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

