சென்னை: கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில், “திமுகவினர் எதையும் மறைக்கவில்லை. வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகின்றனர். எனவே, சிபிஐ விசாரணை தேவையில்லை,” என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார் .
சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியபோது, “கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல்.
“ஆனால், ஒட்டுமொத்த 40 தொகுதிகளிலும் தோல்வியைக் கண்டுள்ள ஒரே காரணத்துக்காகவும், சட்டமன்றத்தில் ஏதாவது பிரச்சினையைக் கிளப்பவேண்டும் என்பதற்காகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களாக இல்லாத குற்றச்சாட்டுகளை எல்லாம் கூறிவருகிறார். சட்டமன்றத்தை முடக்கும் செயல்களிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். சட்டமன்றத்தில் அவருக்குப் பேச வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய்,” என்றார்.
“கள்ளச்சாராயம் விவகாரத்தில், உடனடியாக சிபிசிஐடி விசாரணை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணைய விசாரணைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
“யார் தவறு செய்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் உறுதி அளித்திருக்கிறார். இதற்கு மேலும் சிபிஐ விசாரணை எதற்கு?” என்று அவர் வினவினார்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை-மகன் என இரட்டைக் கொலைச் சம்பவம் நடந்தபோது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அந்தச் சம்பவத்தை மறைக்கப் பார்த்தார். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஃபெலிக்ஸ் மூச்சுத் திணறலில் இறந்ததாகவும் ஜெயராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் கூறினார். இதனால்தான், திமுக அப்பொழுது சிபிஐ விசாரணை கோரியது.
ஆனால், இன்றைக்கு நாங்கள் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் செயல்பட்டுக்கொண்டு இருப்பதால் சிபிஐ விசாரணை தேவையற்றது என்று அமைச்சர் ரகுபதி மேலும் கூறியுள்ளார்.

