சென்னை: அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக கோவை சூலூர் பஞ்சாயத்து யூனியன் தலைவர், திமுக நிர்வாகி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜன.11 அன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். அதில் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளதாகக் கூறி அவருக்கு எதிராக ஒரு கோடியே ஆயிரம் ரூபாயை இழப்பீடு கேட்டு திமுகவைச் சேர்ந்த சூலூர் பஞ்சாயத்து யூனியன் தலைவரான ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
அதில், தனக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க எஸ்.பி.வேலுமணிக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும், எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 17ஆம் தேதி) நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.மனுராஜூம், எதிர்த்தரப்பு சார்பில் வழக்கறிஞர் எஸ்.துரைசாமியும் முன்னிலையாகி வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘ரயிலில் நடந்த சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்தி தவறானது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த நாளிதழ்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனினும், அந்த நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையில் பேசிய எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக மட்டும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே வேலுமணிக்கு எதிராக ஒரு கோடியே ஆயிரத்தை மான இழப்பீடு கேட்க மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை.
அதேசமயம், இந்தச் சம்பவம் குறித்து மட்டும் எதிர்காலத்தில் மனுதாரர் குறித்து வேலுமணி எதுவும் பேசக்கூடாது என நிரந்தர தடை விதிக்கிறேன். ஆனால், மனுதாரரின் மற்ற நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பவும், பேசவும் பொதுவாழ்வில் உள்ள எதிர்மனுதாரரான வேலுமணிக்கு உரிமை உள்ளது. எனவே, நிரந்தர தடை தவிர இழப்பீடு உள்ளிட்ட பிற கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

