சென்னை: பருவநிலை மாற்றத்தையும் அதனால் சமுதாயத்தில் ஏற்படும் தாக்கத்தையும் சமாளிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற இரண்டு நாள் பருவநிலை உச்சநிலை மாநாடு 4.0ல் அவர் பேசினார்.
அதிகரித்துவரும் வெப்பநிலை, மிதமிஞ்சிய மழைப்பொழிவு, புயல், வறட்சி முதலியவை பெரும் சவால்களாய் உருவெடுத்திருப்பதாகத் திரு ஸ்டாலின் கூறினார். அவை மக்களின் வாழ்வாதாரம், வேளாண், நீர் வளங்கள், பொதுச் சுகாதாரம் முதலியவற்றைப் பாதிப்பதாக அவர் சொன்னார்.
பருவநிலை மாற்றம் என்பது எதிர்காலத்தில் வரக்கூடிய பிச்சினை அன்று, மாறாக அது இப்போது அக்கறைக்குரிய விவகாரம் என்றார் தமிழக முதல்வர். அதனைக் கையாள, அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் ஒன்றிணைந்து செயலாற்றுவது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,100 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகத் திரு ஸ்டாலின் கூறினார். அது காற்றின் தரத்தை மேம்படுத்தவும் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கவும் சுற்றுச்சூழலில் சமநிலையை ஏற்படுத்தவும் உதவும் என்றார் அவர்.
பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாகத் திரு ஸ்டாலின் தெரிவித்தார். புதிய வனப் பகுதிகளை உருவாக்குதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்தல், நீர்ச் சேமிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதில் சமூகத்தை ஈடுபடுத்துதல் முதலியவை அவற்றுள் அடங்கும்.
தமிழ்நாடு முழுதும் நடுவதற்காக 500,000 சந்தன மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று திரு ஸ்டாலின் மாநாட்டில் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் 7,700க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகள் இயங்குகின்றன. அவற்றில் 350, சென்னையில் செயல்படுகின்றன. 2030ஆம் ஆண்டுக்குள் அரசாங்கப் பேருந்துகளில் 33 விழுக்காடு மின்சாரப் பேருந்துகளாக இருக்க வேண்டும் என்பது இலக்கு. கடற்பகுதிகளில் கழிவுகளை அகற்றவும் ஒலியால் ஏற்படக்கூடிய மாசைக் குறைக்கவும் தமிழக அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வருங்காலத் தலைமுறையினருக்காகச் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார் திரு ஸ்டாலின். அதற்காகக் குடிமக்கள், தொழில்துறையினர், அமைப்பினர் அனைவரையும் சேர்ந்து பணியாற்ற வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

