சென்னை: உலகளாவிய விண்வெளி வணிகத்தில் இந்தியாவின் பங்களிப்பை உயர்த்துவதற்காக, ஆண்டுதோறும் 50 உந்துகணைகளை விண்ணில் ஏவுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய அவர், உலகளாவிய விண்வெளி வர்த்தக சந்தையில் இந்தியாவின் வருவாயைப் பத்து விழுக்காடு அளவுக்கு உயர்த்த தீவிர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மனித விண்வெளி பயணத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்திற்கான அனைத்து முதன்மைப் பணிகளும் தற்போது தீவிர கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் கூறினார்.
ஆண்டுதோறும் 50 உந்துகணைகளை ஏவும் பிரம்மாண்டமான இலக்கை இந்தியா எட்டுவதற்கு, நவீன ஏவுதள உள்கட்டமைப்பு, ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றார் திரு நாராயணன்.
தனியார் பங்களிப்புடன் விண்வெளித்துறையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் தமிழகத்தின் புதிய ஏவுதள உள்கட்டமைப்புப் பணிகள் வேகமெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
