புதுடெல்லி: வெளிநாடுகளில் இணையக் குற்றக் கும்பலின் பிடியில் சிக்கியுள்ள கிட்டத்தட்ட 3,000 உத்தரப்பிரதேச இளையர்களை மீட்க அம்மாநில காவல்துறை தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இணையக் குற்றப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் யாதவ் தலைமையில் 5க்கும் மேற்பட்ட தனிப்படை காவல்துறையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கம்போடியா, தாய்லாந்து, வியட்னாம் ஆகிய மூன்று நாடுகளும் இணையக் குற்றங்கள் நிகழும் முக்கிய நாடுகளாக அனைத்துலக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தியாவில் இக்குற்றங்களைச் செய்ய இந்தி தெரிந்திருக்க வேண்டுமென்பதால் உத்தரப்பிரதேசத்தில் படித்த இளையர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்து வந்து இணையக் குற்றச்செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.
இவர்கள் குறித்த விவரங்களை மத்திய உள்துறை அமைச்சு தயாரித்ததில் பெரும்பாலானோர் உ.பி.யைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. சுற்றுலா, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக 6 மாத விசாவில் சென்று பல மாதங்களாக நாடு திரும்பாதவர்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
“உத்தரப் பிரதேசத்துடன், மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் இளையர்களும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலை ஆசை காட்டி இளைஞர்களை அழைத்துச் சென்று அவர்களின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களைப் பறித்து வைத்துள்ளனர். இவர்களுக்கு பயிற்சி அளித்து மோசடி செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். இணைய அடிமைகள் என்று அழைக்கப்படும் இந்த இளைஞர்களுக்கு ஒரு தொகையை அளிப்பதுடன் அவர்களின் குடும்பத்தினரையும் மிரட்டி உள்ளதால் பிரச்சினை வெளியில் தெரியவில்லை,” என்று அதிகாரிகள் தெரிவித்ததாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நொய்டாவில் அண்மையில் நடைபெற்ற ஓர் இணையக் குற்றத்தில் சீனாவைச் சேர்ந்த 11 குற்றவாளிகள் சிக்கினர். இவர்களும் இந்திய இளைஞர்களை அடிமைகளாக்கி பயன்படுத்தி உள்ளனர். இக்கும்பலின் முக்கிய நபர் சீனாவில் இருந்து செயல்படுகிறார். அவருக்கு கீழ் சிங்கப்பூர், ஹாங்காங்கிலும் கும்பல்கள் வேலை செய்வது தெரியவந்துள்ளது.