ஹைதராபாத்: பிரபல தெலுங்குத் திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் தொடர்பில் தெலுங்குத் திரையுலகத்தினருக்கும் தெலுங்கானா அரசாங்கத்துக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பதற்றத்தைத் தணிக்க தெலுங்கு நடிகர்களும் தயாரிப்பாளர்களும் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 26) சந்திப்பு நடத்தியுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மூத்த தெலுங்கு நட்சத்திரங்கள் நாகார்ஜுனா, வெங்கடேஷ், தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்டோர் திரு ரேவந்த் ரெட்டியைச் சந்தித்தனர்.
இதற்கிடையே,தெலுங்கானா அரசாங்கத்தை பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சாடியுள்ளது.
முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் தலைமையில் தெலுங்கானாவில் ஆட்சி புரியும் காங்கிரஸ் அரசாங்கம் தெலுங்குப் பட நடிகர்களைக் குறிவைப்பதாக பாஜக பிரமுகரான அமித் மால்வியா கண்டனம் தெரிவித்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“ரேவந்த் ரெட்டியின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தெலுங்கானாவில் காணப்படும் நிகழ்வுகள் கவலை தருகின்றன. அந்த அரசாங்கம், இந்தியாவின் ஆகப் பெரிய ஆக பரபரப்பான திரையுலகுகளில் ஒன்றான தெலுங்குத் திரையுலகைக் குறிவைப்பதுபோல் தெரிகிறது. அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி பணம் பறிக்க முதலமைச்சர் எடுக்கும் முயற்சிகளுக்கு தெலுங்கு நட்சத்திரங்களும் திரைப்படத் தயாரிப்பாளர்களும் இணங்காதது அதற்குக் காரணமாக நம்பப்படுகிறது,” என்று திரு மால்வியா எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.
“ஹைதராபாத்தில் நட்சத்திர நடிகர் நாகார்ஜுனாவின் மாநாட்டு நிலையம் இடிக்கப்பட்டதிலிருந்து சர்ச்சை எழுந்தது. பின்னர் பதவியில் இருக்கும் பெண் அமைச்சர் ஒருவர் நாகார்ஜுனாவின் முன்னாள் மருமகளும் பிரபல நடிகையுமான சமந்தா பிரபுவைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினார். அதோடு, மூத்த நடிகர் மோகன் பாபு மீதும் குறிவைக்கப்பட்டது. அரசியலில் பழிதீர்க்க அவரின் மகன் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆக அண்மையில் மற்றொரு தெலுங்கு நட்சத்திரமான அல்லு அர்ஜுன் பிரச்சினையில் சிக்கியுள்ளார்,” என்று அவர் விவரித்தார்.
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான இம்மாதம் நான்காம் தேதியன்று அவரைக் காண ரசிகர்கள் திரண்டபோது ரேவதி என்ற மாது கூட்டத்தில் மிதிபட்டு உயிரிழந்தார், அவரின் பிள்ளை காயங்களுக்கு ஆளானார். ‘சந்தியா தியேட்டர்’ திரையரங்குக்கு வெளியே அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதன் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 24) அவரிடம் ஹைதராபாத் காவல்துறை விசாரணை நடத்தியது.