அழகிகளின் காலைக் கழுவிய தெலுங்கானா பெண்கள்: வெடித்தது சர்ச்சை

1 mins read
4684e2d8-ae05-48ad-9d25-bb9e3aed2663
பலம்பேட்டில் அழகிகளை வரிசையாக அமர வைத்து, அவர்களின் கால்களை, உள்ளூர் பெண்கள் தண்ணீர் ஊற்றி கழுவினர். - படம்: ஊடகம்

ஹைதராபாத்: உலக அழகிப் போட்டிக்காக வந்த இளம் அழகிகளின் கால்களை தெலுங்கானா பெண்கள் கழுவி வரவேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநில எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இது விருந்தோம்பலின் ஒரு பகுதி என்று தெலுங்கானா அரசு கூறுகிறது.

எதிர்வரும் 31ஆம் தேதி, ஹைதராபாத்தில் உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அழகிகள் பங்கேற்கின்றனர். இதற்காக தெலுங்கானா வந்து சேர்ந்துள்ள அழகிகள் அனைவரும் முக்கிய சுற்றுலாத்தலங்களைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், அண்மையில் பலம்பேட் பகுதியில் உள்ள ருத்ரேஸ்வரா ஆலயத்துக்கு அனைவரும் சென்றனர். இது ‘யுனெஸ்கோ’ பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்.

பலம்பேட்டில் அழகிகளை வரிசையாக அமர வைத்து, அவர்களின் கால்களை, உள்ளூர்ப் பெண்கள் தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டதுடன், சிலரது கால்களைத் துண்டால் துடைத்தும்விட்டனர். இது எதிர்க்கட்சியினரை ஆவேசப்படுத்தி உள்ளது.

ஆனால் தெலுங்கானா அரசு, ‘விருந்தினர்களைக் கடவுளாகக் கருதி, பின்பற்றும் பாரம்பரிய நடைமுறைதான் இது’ என்றும் இதன் மூலம், அனைத்துலக விருந்தினர்களுக்கு மிக உயர்ந்த மரியாதை வழங்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்