72வது உலக அழகியாக வாகை சூடிய தாய்லாந்து அழகி

2 mins read
6e8f6e45-eeef-4336-8587-669ced35f035
உலக அழகியாகப் பட்டம் வென்ற ஓபல் சுச்சாத்தா. - படம்: இன்ஸ்டகிராம்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் 72வது உலக அழகிப் போட்டி கடந்த மே மாதம்10 தேதி தொடங்கி மே 31ஆம் தேதிவரை நடைபெற்றது.

இந்தியாவில் மூன்றாவது முறையாக அப்போட்டி நடப்பது குறிப்பிடத்தக்கது.

108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் அதில் கலந்து கொண்டனர்.

மே 31ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு நடந்த இறுதிச்சுற்றில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓப்பல் சுச்சாத்தா, உலக அழகியாக வாகை சூடினார்.

சென்ற ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற செக் குடியரசு அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா அவருக்கு உலக அழகி கிரீடம் சூட்டினார்.

பட்டத்துடன் பரிசுத்தொகையாக ரூ. 8.5 கோடி திருவாட்டி ஓப்பலுக்கு வழங்கப்பட்டது.

வெள்ளைநிற உடை அணிந்து வந்த அவர், ‘ஓபல் ஃபார் ஹெர்’ (ஓபல் ரத்தினக் கல்)என்ற பெயரில், உலக அழகிப் பட்டத்தை அனைத்து அழகிகளுக்கும் சமர்ப்பித்தார்.

மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த திருவாட்டி ஓப்பல், அதுகுறித்த விழிப்புணர்வையும் மேடையில் பகிர்ந்தார்.

தாய்லாந்து நாட்டிலிருந்து தேர்வு செய்யப்படும் முதல் உலக அழகி ஓப்பல் சுசாத்தா என்பதால் பலரது கவனத்தை அவர் பெற்று வருகிறார்.

கடைசிச் சுற்றில் திருவாட்டி ஓப்பலிடம் கேள்வி கேட்டவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். அவர் அளித்த மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே உலக அழகிப் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணா கிராவிடெஸ் உலக அழகி ஆசியா பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

முன்னதாக, இந்தப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்துவதாகக் கூறி, போட்டியிலிருந்து இங்கிலாந்து அழகி மில்லா மேகி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்புச் சொற்கள்