அறுபடை வீடுகளில் உற்சாகம் மேலோங்கிய தைப்பூசத் திருநாள்

அறுபடை வீடுகளில் உற்சாகம் மேலோங்கிய தைப்பூசத் திருநாள்

1 mins read
afbf285c-1acd-4789-bb11-66f3bc40163e
தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில் அதிகாலை சிறப்பு வழிபாட்டுடன் தைப்பூசம் களைக்கட்டியது. - படம்: டெக்கன் குரோனிக்கல்
Google News Preferred Icon

திருப்பரங்குன்றம்: உலக நாடுகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் தைப்பூசத் திருநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடிவரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில் அதிகாலை சிறப்பு வழிபாட்டுடன் தைப்பூசம் களைக்கட்டியது.

திருப்பரங்குன்றம், பழனி, திருத்தணி, திருச்செந்தூா், சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளில் உள்ள முருகத் திருத்தலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.

தைப்பூசத் திருநாளுக்கு ஒரு நாள் முன்னரே ஆலயங்களுக்குமுன் பக்தர்கள் அலையென திரண்டனர். அதிகமான பக்தர்களை முன்னிட்டு கட்டண தரிசனத்திலும் நீண்ட வரிசை காணப்பட்டது.

தூண்டுகை விநாயகர் ஆலயம், திருச்செந்தூர் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் பாதுகாப்புக் கருதி கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் கடற்கரையில் மீட்புப் படகு வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், அவசரப் பிரிவு மருத்துவர்கள் ஆகியோர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் ஆலய வளாகத்திலும் கூடுதலான மருத்துவக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தைப்பூசத் திருநாள் பெளர்ணமி நாள் என்பதால் திருப்பரங்குன்றத்தின் கிரிவலப் பாதையிலும் பக்தர்கள் காவடி ஏந்தியவாறு நேர்த்திக்கடனைச் செலுத்துவருகின்றனர்.

இதேபோன்று பழனி கிரிவலப் பாதையிலும் மயில், பால் காவடிகளை ஏந்தி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் உயா் கோபுரங்கள் அமைத்து பக்தர்களுக்குக் காவல்துறை அதிகாரிகள் வழிகாட்டி வருகின்றனா்.

மேலும், பக்தர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு வழிகாட்ட கியூஆர் குறியீட்டுடன் ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் மலையேறும் இடத்தில் மோப்ப நாய்களுடன் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்