சென்னை: தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக, அண்டை மாநிலமான கேரளாவில் கால்பதிக்க இருப்பதாகவும் கட்சியின் கேரள மாநிலத் தலைவராக மலையாளத் திரைப்பட நடிகர் தேவன் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் விஜய்யும் தேவனும் ஆறு திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார் தேவன். எனினும், அங்கு தமக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனக் கூறி கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அக்கட்சியில் இருந்து விலகினார்.
அதையடுத்து, தவெக தலைமை அவரைத் தொடர்புகொண்டு கட்சியில் சேர அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.
சாலக்குடியில் உள்ள இல்லத்தில் தவெக பிரதிநிதிகள் அவரை நேரில் சந்தித்து கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், அவர் தவெகவில் இணைய திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, கேரள மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்குமாறு தவெக மூத்த நிர்வாகிகள் அவருக்கு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளனர். காங்கிரசும் பிற உள்ளூர் அமைப்புகளும் அழைப்பு விடுத்தபோதிலும், மாற்று அரசியலை முன்னெடுக்கும் விஜய்யின் அழைப்பை ஏற்க தேவன் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
“கேரளாவில் வழக்கமான காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக மீது மக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், இளையர்கள் தவெகவை ஒரு சிறந்த மாற்றாகப் பார்க்கின்றனர்,” என நடிகர் தேவன் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடையும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பிறகு, செப்டம்பர் 10ஆம் தேதிக்குப் பின்னர், சென்னையில் விஜய்யை நேரில் சந்தித்து தேவன் ஆலோசனை நடத்த உள்ளார் என்றும் அந்தச் சந்திப்பிற்குப் பிறகே இறுதி முடிவும் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


