லண்டன்: நச்சுத்தன்மை உள்ள இருமல் மருந்து விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் நிலைமை சற்று மேம்பட்டுள்ளது.
இருப்பினும், அது போதாதென்றும் நச்சுத்தன்மை உள்ள இருமல் மருந்து விற்பனையைத் தடுக்க இந்தியா கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’ எனப்படும் அந்த இருமல் மருந்தை உட்கொண்டு குறைந்தது 24 சிறுவர்கள் மாண்டுவிட்டனர்.
மருந்தை ஸ்ரீசான் ஃபார்மா நிறுவனம் உற்பத்தி செய்தது.
‘டைதிலன் கிலாய்கோல்’ எனப்படும் நஞ்சு அந்த மருந்தில் இருந்தது சோதனையில் தெரியவந்துள்ளது.
அந்த நஞ்சு, இருமல் மருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 500 மடங்கு அதிகம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவிலும் இந்தோனீசியாவிலும் தயாரிக்கப்பட்ட மருந்துகளை உட்கொண்டு குறைந்தது 300 சிறுவர்கள் மாண்டனர். அந்த மருந்துகளிலும் அதே நஞ்சு வகைகள் இருந்தன.
இதையடுத்து, மருந்துகள் தொடர்பான விதிமுறைகளைக் கடுமையாக்க உலகளாவிய நிலையில் உறுதி பூணப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், அமலாக்கப் பணிகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்வதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதில் இந்தியா சற்று மேம்பட்டுள்ளதாக அது கூறியது.
மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்பு அவற்றில் நஞ்சு வகைகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய சோதனைகளை நடத்த இந்தியா புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்தியாவில் விற்கப்படும் மருந்துகளுக்கு இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்தது.
“மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதாது. இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது. இந்தியாவின் மருந்தியல் துறை மிகப் பெரியது. ஆயிரக்கணக்கிலான மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் பல மாநிலங்களும் உள்ளன,” என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் அதிகாரி திரு ருடென்டோ குவானா தெரிவித்தார்.
இவ்வாண்டு இறுதிக்குள் அனைத்துலக தரநிலைக்கு இந்திய மருந்தியல் நிறுவனங்கள் அவற்றின் மருந்து தயாரிப்பு ஆலைகளை மேம்படுத்தியதும் மருந்து ஏற்றுமதி தொடர்பான விதிமுறையை ரத்து செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.
ஆனால், இதுகுறித்து இந்திய சுகாதார அமைச்சும் மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு ஆணையமும் கருத்து தெரிவிக்கவில்லை.