புதுடெல்லி: மொழியின் பெயரால் நாட்டைப் பிரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
சிலர் இந்தி, தமிழ் மொழிகள் தொடர்பாக வீண் சர்ச்சையை உருவாக்கி வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.
“அனைத்து இந்திய மொழிகளும் முக்கியமானவை. அவை ஒன்றுக்கு ஒன்று போட்டி அல்ல. அவற்றுக்கு இடையே ஒற்றுமை உள்ளது,” என்றார் ராஜ்நாத் சிங்.
அனைத்து இந்திய மொழிகளையும் இந்தி பலப்படுத்துகிறது. பல்வேறு இந்திய மொழிகளில் இருந்து இந்தி பலன்பெறுகிறது என்றும் அவர் கூறினார்.
டெல்லியில் பாஜக மகளிர் அணி சார்பில், பெண் சுதந்திர போராட்ட வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ராணி வேலுநாச்சியார், மக்களுக்கு ஆதரவான ஆட்சியாளராக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
ராணி வேலு நாச்சியாரின் வாழ்க்கை துணிச்சலுக்கும் தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்கிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய முதல் அரசி அவர்தான் என்று ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார்.
“உண்மையான தலைமைத்துவம் என்பது தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதில் இல்லை. அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராகப் போராடுவதில் உள்ளது என்பதை தனது தலைமைப் பண்புகளின் மூலம் நிரூபித்தவர் வேலு நாச்சியார்.
“தமிழகத்தில் ராணி வேலு நாச்சியாருடன் ராணி மங்கம்மாளும் சிறந்த பெண் ஆட்சியாளராக இருந்தார். அவர் தனது ஆட்சியைக் காத்ததுடன், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைக் கொண்டு வந்தார். உள்கட்டமைப்புத் திட்டத்தில் ஏராளமான முதலீடு செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
“சாலைகள் அமைப்பதிலும் மக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்குவதிலும் கவனம் செலுத்தினார். நெடுஞ்சாலைகளைக் கட்டமைத்த பெருமை அவருக்கு உள்ளது,” என்றார் ராஜ்நாத் சிங்.
சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு ஆகிய இந்தியப் போராட்டங்களில் பெண்கள் பங்கேற்றபோது அவை தேசிய அளவிலான இயக்கங்களாக மாறியதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து வீடுகள், வீதிகள், கிராமங்களில் அந்தப் போராட்டங்கள் நடந்ததாகச் சுட்டிக் காண்பித்தார்.

