புதுடெல்லி: மின்னிலக்கப் பணப் பரிமாற்றங்களுக்கு அங்க அடையாளங்களைப் பயன்படுத்தும் உயிரளவை முறைக்கு (biometric) மாற இந்தியாவின் தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் மின்னிலக்கப் பணப்பரிமாற்றங்களில் தற்போது 80% க்கும் அதிகமானவை யுபிஐ (Unified Payments Interface) மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. கோடிக்கணக்கான மக்கள், வணிக நிறுவனங்கள், சிறு கடைகள்வரை அனைவரும் யுபிஐ மூலம் பரிமாற்றங்களைச் செய்கிறார்கள். இதற்கு கூகள் பே, பேடிஎம் போன்ற பல்வேறு செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அத்தகைய செயலிகள் மூலமாக பணம் செலுத்த தற்போது 4 அல்லது 6 இலக்க ரகசிய எண்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எண்களை மறப்பது, எண்கள் திருடப்படுவதால் பணமோசடிக்கு ஆளாவது போன்றவற்றைத் தவிர்த்து, மின்னிலக்கப் பணப்பரிமாற்றத்தை மேலும் பாதுகாப்பானதாக்க தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் திட்டமிட்டுள்ளது.
அதையொட்டி, உயிரளவையைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த முறையில் பணம் செலுத்துபவர்கள் தங்கள் கைரேகையையோ அல்லது முக அடையாளத்தையோ பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.
இதனால் பணத்திற்கு உரியவர்கள் மட்டுமே பணத்தை செலுத்த முடியும் என்பதுடன், பண மோசடிகள் தடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ரகசிய எண்களுக்குப் பதிலாக உயிரளவை மூலம் இணையப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியைத் தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் விரைவில் நடப்புக்குக் கொண்டு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகப் பல நிறுவனங்களுடன் இணைந்து பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.