டெஹ்ரான்: இந்திய அரசு தங்களை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஈரானில் உள்ள கல்வி நிலையங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஈரானில் தற்போது 1,595 இந்திய மாணவர்கள் இருப்பதாகவும் 183 யாத்திரிகர்கள் இருப்பதாகவும் அவர்களை உடனே மீட்க வேண்டும் என்றும் தெலுங்கானா மாநில மூத்த அரசியல் தலைவர் ஓவைசி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மொத்த மாணவர்களில், 140 பேர் மருத்துவம் படித்து வருவதாகவும் அனைவரையும் மீட்க வேண்டும் என்றும் தெலுங்கானா முதல்வரிடமும் ஓவைசி கேட்டுக்கொண்டுள்ளார்.
இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. தற்போது இரு நாடுகளுமே சரமாரி தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த தீவிர மோதல் காரணமாக, ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் கடும் அதிர்ச்சிக்கும் தவிப்புக்கும் ஆளாகி உள்ளனர்.
அதிகாலை வேளையில் தாக்குதல்கள் நடப்பதாகவும் அச்சமயம் நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல் உணர்ந்ததாகவும் காஷ்மீரைச் சேர்ந்த தாபியா ஜாஹ்ரா என்ற மாணவி கூறியுள்ளார். இவர் தெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலையில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
“எது பாதுகாப்பான இடம் என்பது குறித்து பல்கலை அதிகாரிகள் எந்த விவரமும் தெரிவிக்கவில்லை. இணையச் சேவைகளில் அவ்வப்போது இடையூறு ஏற்படுவதால் குடும்பத்தாரைத் தொடர்புகொள்ள இயலவில்லை,” என்றும் தாபியா மேலும் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு மருத்துவ மாணவி
தொடர்புடைய செய்திகள்
ஆலிஷா ரிஸ்வி கூறுகையில், “எங்களைப் பற்றிய விவரங்களைத் தெரிவிப்பதுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், எங்களை மீட்பதற்காக தகவல்களைச் சேகரிக்கும் பணிகளிலும் தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்,” என்றார்.
தெஹ்ரான் அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்டு உள்ளதால் இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து தாயகம் திரும்ப முடியவில்லை.

