தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க-இந்திய செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

2 mins read
63b745ab-ca16-4e25-803d-25a4ed6592e4
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆம் ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை (ஜூலை 30) மாலை 5.40 மணியளவில் நிசார் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

ஸ்ரீஹரிகோட்டா: பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து உருவாக்கிய செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இஸ்ரோ, நாசா கூட்டு முயற்சியில் உருவான அந்த நிசார் செயற்கைக்கோள் பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வையும் மேற்கொள்ளும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் புவியின் சுற்றுச்சூழல்களை ஆய்வு செய்தல், எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்காகத் தொடர்ந்து செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன.

அதன் தொடா்ச்சியாக, நிலத்தின் சுற்றுச்சூழல், கடற்பரப்பு, பனி உருமாற்றம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளும் நோக்கத்தில் இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கூட்டு முயற்சியில் ரூ.12,000 கோடி மதிப்பில் நிசார் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது.

அந்த செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆம் ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை (ஜூலை 30) மாலை 5.40 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்ணில் பாய்ந்த 19ஆவது நிமிடத்தில் திட்டமிட்டபடி சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் நிசார் செயற்கைக்கோள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அத்திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

இந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள செயற்கைக்கோள் மொத்தம் 2,392 கிலோ எடை கொண்டது. இதன் மூலம் புவியின் சூழலியல் மாற்றங்கள் குறித்து நுட்பமான ஆய்வுகளை மேற்கொள்வதுடன் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பேரிடர் மேலாண்மை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களைப் பெற முடியும்.

இதில், குறிப்பாக புவியின் நிலம், நீர் மற்றும் பனிப்பரப்புகளில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக்கூட எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

இந்தச் செயற்கைக்கோள் நாளும் பூமியை 14 முறை சுற்றிவரும்.

மேலும், 12 நாள்களுக்கு ஒருமுறை பூமியின் நிலப்பரப்புகளை இருமுறை வருடி, தெளிவாகப் படம்பிடித்து அனுப்பும்.

குறிப்புச் சொற்கள்