டேராடூன்: உத்தராகண்டில் கடந்த புதன்கிழமை (ஜூலை 31) மேக வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பெய்யும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 25 பேர் காயமடைந்துள்ளனர்.
மலையேற்றப் பாதையில் ஆயிரக்கணக்கான கேதார்நாத் செல்லும் பக்தர்கள் சிக்கித்தவிக்கின்றனர்.இதுவரையில் 9,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாட்டிக்கொண்டுள்ள மேலும் பல நூறு பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உணவு, தண்ணீர், தங்குமிடம் வழங்கவும், அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான மீட்புப் பணிகளிலும் 882 பணியாளர்கள், 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
ஜங்கிள்சட்டி பகுதியில் கேதார்நாத்திற்கு செல்லும் மலையேற்றப் பாதையில் 20 முதல் 25 மீட்டர் நீளமுள்ள சாலை மந்தாகினி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து, கேதர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 8ஆம் தேதி வரையில் உத்தராகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.