உத்தராகண்ட் சோகம்: ஹெலிகாப்டர் விபத்தில் ஆறு பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட் சோகம்: ஹெலிகாப்டர் விபத்தில் ஆறு பேர் உயிரிழப்பு

படம்: இந்தியா டுடே

31 Oct 2026 - 4:43 pm

2 mins read

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் புனிதத் தலத்திலிருந்து டேராடூன் நோக்கிப் புறப்பட்ட ஹெலிகாப்டர், ஜோஷிமத் அருகே மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய கோர விபத்தில் விமானி உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

‘டிரான்ஸ் பாரத் ஏவியேஷன்’ (Trans Bharat Aviation) நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டர், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) பிற்பகல் 1.14 மணியளவில் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே ‘ஹாதி பர்வத்’ மலைப்பகுதியில் நிலவிய அடர்ந்த பனிமூட்டம், மோசமான வானிலை காரணமாகக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

அதையடுத்து, மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரும் ராணுவத்தினரும் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஜோஷிமத் அருகே உள்ள சாயி கிராமத்தின் வனப்பகுதியில் ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்த நிலையில் கண்டறியப்பட்டது.

இவ்விபத்தில் ஹெலிகாப்டரை இயக்கிய டெல்லியைச் சேர்ந்த விமானி ஹிமான்சு சபர்வால், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஐந்து பயணிகள் உயிரிழந்தனர்.

பெங்களூரு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அருண் சலுங்கே, வழக்கறிஞர்கள் சுதீர், சங்கர் கவுடா, நடராஜ், பிரதாப் ஆகியோர் உயிரிழந்த பயணிகளாவர்.

விபத்து நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, ஹெலிகாப்டர் புறப்படத் தயார் நிலையில் இருந்தபோது, பயணி பிரதாப் தனது கைப்பேசியில் மகிழ்ச்சியுடன் ‘செல்ஃபி காணொளி’ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்புக் குழுவும் விசாரணைக்காக டேராடூன் சென்றுள்ளது.

மலைப்பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் தற்காலிகமாக ஹெலிகாப்டர் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்