தாவர எண்ணெய் விலை வீழ்ச்சி; சர்க்கரை விலை ஏறுமுகம்

தாவர எண்ணெய் விலை வீழ்ச்சி; சர்க்கரை விலை ஏறுமுகம்

2 mins read
e4829344-3cc1-4b99-9370-9365f42c04e9
இந்தியாவிலுள்ள பல்பொருள் அங்காடியில் ஒன்றில் மளிகைப் பொருள்கள். - படம் ராய்ட்டர்ஸ்

2026ல் முதன்முறையாகத் தாவர எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த அதே வேளையில், தானியங்கள், சர்க்கரை ஆகியவற்றின் விலைகள் உயர்ந்தன என்று  ‘எஃப்ஏஓ’ என்ற ஐக்கிய நாடுகளின் உணவு, வேளாண்மை அமைப்பு ஜூன் 5ல் தெரிவித்துள்ளது.

உலக அளவில் வணிகம் செய்யப்படும் உணவுப் பொருள்களின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை அளவிடும் ‘எஃப்ஏஓ’வின் உணவு விலைக் குறியீடு, மே மாதத்தில் சராசரியாக 130.8 புள்ளிகளாக இருந்தது. 

இது அதன் திருத்தப்பட்ட ஏப்ரல் அளவான 131.0 புள்ளிகளிலிருந்து 0.2 விழுக்காடு குறைவு என்றாலும், முந்தைய ஆண்டை விட 2.9 விழுக்காடு அதிகமாகும்.

தானியங்களின் விலைகள் இந்த மாதத்தில் 2.6 விழுக்காட்டுக்கும் மேல் உயர்ந்தன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்றுமதிக்கான அறுவடை வாய்ப்புகள் குறைந்தன.

ஆயினும், ஈரான் மோதல் காரணமாக எரிபொருள், உரங்களின் விலைகள் அதிகரித்ததாலும், கோதுமை விலை தொடர்ந்து நான்காவது மாதமாக உயர்ந்துள்ளது.

வலுவான இறக்குமதித் தேவை, பிரேசில் மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட விநியோகப் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்காச்சோளத்தின் விலையிலும் ஆதரவு கிடைத்ததாக அந்த அமைப்பு கூறியது.

இதற்கு நேர்மாறாக, தாவர எண்ணெய் விலைகள் மே மாதத்தில் 4.6 விழுக்காடு குறைந்தன. 

இது 2026-ஆம் ஆண்டில் ஏற்படும் முதல் மாதாந்தரச் சரிவாகும். ‘ரேப்சீட்’ (rapeseed), சூரியகாந்தி ஆகியவற்றின் எண்ணெய் விலை உயர்வைக் காட்டிலும் செம்பனை, சோயா ஆகியவற்றின் எண்ணெய் விலைகளின் வீழ்ச்சி அதிகமாக இருந்ததே இதற்குக் காரணமாகும். 

விலைகள் ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக உயர்ந்த பிறகு, அனைத்துலகச் செம்பனை விலைகள் சரிந்தன.

அனைத்துலக இறக்குமதித் தேவையின் தொய்வு, கச்சா எண்ணெய் சந்தைகளில் உள்ள நிச்சயமற்ற தன்மை குறித்த எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில், தாவர எண்ணெய் விலைகள் சராசரியாக 2025ஆம் ஆண்டை விட இன்னமும் 20 விழுக்காட்டுக்கும் மேலாகவே உள்ளன. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து உயர்ந்த எரிசக்திச் செலவுகளால், எண்ணெய் வளம் மிக்கத் தாவரங்கள் போன்ற கரிமப் பொருள்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உயிரி எரிபொருள்களுக்கான (biofuels) தேவை அதிகரித்ததே இதற்குக் காரணமாகும்.

சர்க்கரை விலை மே மாதத்தில் 7.5 விழுக்காடு உயர்ந்து 95.1 புள்ளிகளை எட்டியது. எனினும், இது முந்தைய ஆண்டின் அளவை விட 13.1 விழுக்காடு குறைவாகவே இருந்தது. வரும் மாதங்களில் உலகளாவிய சர்க்கரை விநியோகம் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளின் மீதான கவலைகளே இந்த விலை ஏற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

குறிப்புச் சொற்கள்