வெனிசுவேலா கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பரிசீலிக்கும் இந்தியா

வெனிசுவேலா கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பரிசீலிக்கும் இந்தியா

2 mins read
bd84e555-5cae-45ef-87ef-2a20125b3c56
வெனிசுவேலா எண்ணெய் இறக்குமதியால் நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றார் ரந்தீர் ஜெய்ஸ்வால். - கோப்புப்படம்: தி ஸ்டேட்ஸ்மேன்

புதுடெல்லி: வெனிசுவேலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பான தனது நிலைப்பாட்டை இந்திய அரசு தெரிவித்துள்ளது.

எந்தவொரு நாட்டுடனும் கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்பான வணிக ரீதியிலான ஒப்பந்தங்களை ஆராய இந்தியா தயார் என, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 140 கோடி இந்தியர்களின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்று அவர் மீண்டும் தெளிவுபடுத்தினார். அனைத்துலக நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவின் எரிசக்தி ஆதாரங்கள் அதிகரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த அம்சத்தைக் கவனத்தில் கொண்டே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“வெனிசுவேலா வர்த்தகம், முதலீடு, எரிசக்தித் துறைகளில் இந்தியாவுக்கு நீண்டகால கூட்டாளியாக இருந்து வருகிறது.

நாங்கள் அங்கிருந்து 2019-20 வரை கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தோம். பிறகு அதை நிறுத்த வேண்டியிருந்தது,” என்றார் திரு ரந்தீர் ஜெய்ஸ்வால்.

எனினும், பின்னர் 2023-24ல் மீண்டும் வெனிசுவேலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கியதாகவும் ஆனால் அந்நாட்டின் மீதான தடை காரணமாக தொடர்ந்து வாங்க இயலவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா அறிவித்த வரி குறைப்பு காரணமாக, இந்தியப் பொருள்கள் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரிக்கும் என்றும் வர்த்தக ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதிக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் என்றும் திரு ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.

“இதனால் நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறும். வளர்ச்சி நோக்கி செல்ல உதவியாக இருக்கும்,” என்றார் ரந்தீர் ஜெய்ஸ்வால்.

வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தித் துறையில் இந்தியாவும் சீனாவும் முதலீடு செய்ய முன்வரும்படி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்