நெகிழி நுண்துகள்கள்: எச்சரிக்கை வாசகங்களை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

நெகிழி நுண்துகள்கள்: எச்சரிக்கை வாசகங்களை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கோப்புப் படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

28 Sep 2026 - 7:05 pm

2 mins read

சென்னை: குடிநீர் போத்தல்கள், உப்பு, சர்க்கரைப் பொட்டலங்களில் நெகிழி நுண்துகள்கள் (மைக்ரோ பிளாஸ்டிக்) குறித்த சிவப்பு நிற எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மனிதர்களின் நஞ்சுக்கொடியில் நெகிழி நுண்துகள்கள் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

அப்போது, நெகிழி நுண்துகள்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பெரும் தீங்கை விளைவிக்கக்கூடியது என்றும் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருள்களில் நெகிழி நுண்துகள்கள் இருக்க வாய்ப்பு உள்ளதால் சிவப்பு நிற எச்சரிக்கை வாசகங்களை அச்சிட வேண்டும் என்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி அந்த ஆணையமும் தனியார் சங்கம் ஒன்றும் மனுதாக்கல் செய்தன.

இறுதியான ஆய்வறிக்கைகள் எதுவும் வெளிவராத நிலையில், இத்தகைய எச்சரிக்கை வாசகங்கள் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத பீதியை உருவாக்கும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இவ்வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

எச்சரிக்கை வாசகங்கள் தொடர்பான முந்தைய உத்தரவை மாற்றவோ அல்லது மறு ஆய்வு செய்யவோ முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

மேலும், இந்த உணவுப்பொருள்கள் பாதுகாப்பற்றவை என நீதிமன்றம் கூறவில்லை என்றும் எதிர்காலத்தில் வரும் கூடுதல் ஆய்வுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் விளக்கமளித்தனர்.

குறிப்புச் சொற்கள்