இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிலையம், எடைமிக்க தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவி, சாதனை படைத்துள்ளது.
மொத்தம் 4,410 கிலோ எடைகொண்ட ‘சிஎம்எஸ்-03’ செயற்கைக்கோள், இஸ்ரோவின் மேம்பட்ட செயலாற்றலின் மற்றொரு மைல்கல்லாகத் திகழ்கிறது.
இத்தகைய செயற்கைக்கோள்களைச் செலுத்த இந்தியா, முன்னதாக வெளிநாட்டு உந்துகணைகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
எதற்காக இந்தச் செயற்கைக்கோள்?
‘சிஎம்எஸ்-03’ என்ற இந்தப் பல்வரிசைத் (multi-band) தொடர்புச் செயற்கைக்கோள், இந்தியத் துணைக்கண்டத்தைத் தாண்டிப் பெருங்கடல்களிலும் தொலைத்தொடர்புச் சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013லிருந்து செயல்பட்டு வரும் ஜிஎஸ்ஏடி-7 ருக்மிணி செயற்கைக்கோளுக்கு அடுத்து முக்கியமான பொறுப்பில் ‘சிஎம்எஸ்-03’ செயல்படவிருக்கிறது.
கடற்படையின் தேவைகளை நிறைவு செய்யவுள்ள ‘சிஎம்எஸ்-03’, பேரிடர் நிர்வாகத்திற்கும் தொலைதூர இணைப்புக்கும் நன்கு பயன்படும்.
செயற்கைக்கோள் ஏவப்பட்டது எப்படி?
தொடர்புடைய செய்திகள்
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளைத் தாங்கிய எல்விஎம்3-எம்5 உந்துகணை விண்ணில் ஏவப்பட்டது.
புவியிணைவுச் சுற்றுப்பாதை (geosynchronous orbit) எனும் புவியைச் சுற்றியுள்ளதொரு நேரான, வட்டச் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் தற்போது சுற்றி வருகிறது
‘பாகுபலி’ எனும் புனைபெயரால் அழைக்கப்படும் எல்விஎம்3-எம்5 உந்துகணையின் பக்கவாட்டில் திண்ம எரிபொருள் கொண்ட துணை உந்துகணைகள் இணைக்கப்பட்டன. உந்துகணை பூமியிலிருந்து கிளம்பி, கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்குப் பிறகு இந்தத் துணை உந்துகணைகள் அதிலிருந்து விடுபட்டன.
விண்வெளித்துறை அறிவியலாளர்கள், பொறியாளர்கள் என கிட்டத்தட்ட 200 பேர், பயணக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து பணிகளையும் கண்காணிப்பையும் கவனித்து வந்தனர்.
எதனால் இது சாத்தியமானது ?
செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான ‘பாகுபலி’ உந்துகணை, வெற்றிகரமாக எட்டுப் பயணங்களை நிறைவேற்றிய நிலையில் அது நம்பகத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இஸ்ரோ குழுவினர், உந்துகணையின் முக்கியமற்ற பகுதிகளின் எடையை இயன்றவரை குறைத்ததால் கூடுதலாக 10 விழுக்காடு எடையைச் சுமக்கும் வலிமையை அந்த உந்துகணை பெற்றது.

