கடும் வெயிலால் 12 மாநில வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீ

கடும் வெயிலால் 12 மாநில வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீ

1 mins read
மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 634 இடங்கள் பாதிப்பு
55188811-e729-4d39-ba9d-9cd00fc332f5
மத்தியப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 634 இடங்களிலும் மகாராஷ்டிரா, சத்தீஸ்கரில் தலா 465 இடங்களிலும் காட்டுத்தீ பற்றி எரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: இந்தியாவில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக, மத்தியப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த மூன்று நாள்களாக நீடிக்கும் இந்தத் தீச்சம்பவங்கள் செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

மாநில வாரியாகப் பார்க்கையில், மத்தியப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 634 இடங்களிலும் மகாராஷ்டிரா, சத்தீஸ்கரில் தலா 465 இடங்களிலும் காட்டுத்தீ பற்றி எரிகிறது.

ஆந்திராவில் 400க்கும் மேற்பட்ட இடங்களும் அசாம், மணிப்பூரில் நூற்றுக்கணக்கான இடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

உத்தராகண்ட் மாநிலத்தில் ஏறக்குறைய 130 ஹெக்டேர் வனப்பரப்பு தீயால் கருகியுள்ளது. குறிப்பாக, சார்தாம் யாத்திரை நடைபெறும் பாதையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் தீ பரவியுள்ளதால் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்தத் தீச்சம்பவங்களால் அரிய வகை மரங்களுக்கு மட்டுமன்றி வனவிலங்குகளுக்கும் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.

தொடர்ந்து வீசும் அனல் காற்று தீயை அணைக்கும் பணிகளுக்குப் பெரும் சவாலாக இருந்தாலும், வனத்துறையினர் அதனைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்