‘ஷூட்’ ஜப்பானியக் காற்பந்துக் கழகத்தின் ஆண்கள் காற்பந்துக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே பெண்ணாகத் திகழ்கிறார் 11 வயது ஷ்ரினா சரவணன்.
சுவீடனில் நடந்த கோத்தியா கிண்ணப் (Gothia Cup) போட்டியில் ஷ்ரினா அக்குழுவில் விளையாடிய ஒரே பெண். இவர் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியரும் ஆவார்.
தோக்கியோ கிண்ணம், எம்பிஎஸ் கிண்ணம், ஜேஎஸ்எஸ்எல் செவன்ஸ், ஜேஎஸ்எஸ்எல் லீக், சிங்கப்பூர் ஜப்பானியச் சங்கப் போட்டி, ஆக்டிவ்எஸ்ஜியின் பெஸ்டா சுக்கான் எனப் பல போட்டிகளில் இவர் பங்கேற்றிருக்கிறார்.
ஏழு வயதில் காற்பந்து விளையாடத் தொடங்கினார் ஷ்ரினா. கால்களால் பந்தை அவர் நன்குக் கட்டுப்படுத்தி திறன்களை வெளிப்படுத்தியதைக் கண்ட பெற்றோர் அவரைக் காற்பந்துப் பயிற்சிகளில் சேர்த்தனர்.
ஆண்கள் காற்பந்துக் குழுவில் ஒரே பெண்ணாக இருப்பது ஷ்ரினாவின் திறமைக்குச் சான்று.
இவரின் முன்னேற்றத்தில் பெற்றோருக்குப் பெரும்பங்குண்டு. மனத்தளவில் ஆதரவளிப்பதுடன் ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்குவது போன்ற அம்சங்களில் ஷ்ரினாவை நன்கு கவனிக்கிறார் இவரின் தாயும் பாலர் பள்ளித் தலைமை ஆசிரியருமான சப்ரினா ஜேம்ஸ், 44.
“புரதச்சத்து உள்ள உணவுவகைகள், முட்டை, பால் ஆகியவற்றை அவர் போதுமான அளவில் உட்கொள்கிறாரா என்பதைக் கவனிக்கிறேன்.
“வெற்றி தோல்வியில் கவனம் செலுத்தாமல் காற்பந்து மகிழ்ச்சியளிக்கிறதா என்பதை மட்டும் சிந்தித்துப் பார்க்குமாறு ஷ்ரினாவிடம் கூறுவோம். ஆணா பெண்ணா என்பதை நாங்கள் பார்க்கவில்லை. அவருக்கு (காற்பந்தில்) அதிக நாட்டம் இருப்பதால்தான் ஊக்குவிக்கிறோம்,” என்றார் திருவாட்டி சப்ரினா.
ஷ்ரினாவின் தந்தையும் சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படை வீரருமான 46 வயது சரவணன் இளங்கோவன், “ஷ்ரினாவுடன் விளையாடும் பெரும்பாலார் ஆண்களாக இருப்பர். அதனால் விளையாட்டுச் சூழல் மாறுபடலாம். அதற்கேற்றவாறு எவ்வளவு மனவுறுதியுடன் இருக்கவேண்டும், எப்படிப் போட்டித்தன்மையுடன் இருக்கவேண்டும் என்பனவற்றைக் கற்றுத் தந்து அவரை ஊக்குவிப்பேன்,” என்றார்.
விடாமுயற்சியுடன் விட்டுக்கொடுக்காமல் இருப்பது ஷ்ரினாவின் மனப்போக்கு என்றும் அதுவே அவரைக் குழுவில் சேர்த்துக்கொண்டதற்குக் காரணம் என்றும் கூறினார் பயிற்றுவிப்பாளர் முகம்மது ஹுஸ்னி பின் முபாரக், 39.
“எங்களைப் பொறுத்தவரை, அவர் பெண்களுக்கு மட்டுமின்றி எல்லா இளையர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறார்,” என்றும் ஹுஸ்னி குறிப்பிட்டார்.
ஷ்ரினா தொடர்ந்து காற்பந்து விளையாடவும் பயிற்சிகளில் ஈடுபடவும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர சரவணன் - சப்ரினா இணையர் எண்ணம் கொண்டுள்ளனர். ஷ்ரினா உயர்நிலைப் பள்ளிக்குப் போகும்போது அப்பள்ளியின் காற்பந்துத் துணைப்பாட வகுப்பில் சேர்ந்து, பள்ளிக் குழுவிற்காக விளையாடச் செய்வது இவர்களின் இலக்கு.
மேலும், தாங்களும் காற்பந்து, உடலுறுதிப் பயிற்சியளிப்பதுடன் ஷ்ரினாவின் எல்லா காற்பந்துப் பயிற்சிகளையும் அவர் பங்கேற்கும் எல்லாப் போட்டிகளையும் நேரில் சென்று பார்த்து ஆதரவளிக்கவிருப்பதாக இருவரும் கூறினர். அத்துடன், கல்வி, காற்பந்து இரண்டுக்கும் ஷ்ரினா ஒரே அளவு முக்கியத்துவம் கொடுக்க உதவுவதிலும் அவர்கள் உறுதியுடன் இருக்கின்றனர்.
வருங்காலத்தில் சிங்கப்பூர் தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என்பது கிரீன்ரிட்ஜ் தொடக்கப் பள்ளியில் தொடக்கநிலை ஐந்தில் பயிலும் ஷ்ரினாவின் கனவு.
“தேசிய அணியில் இடம்பெற்று, பெண்களும் அதிக அளவில் காற்பந்து விளையாட ஊக்குவிக்க விரும்புகிறேன். விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றை இந்த விளையாட்டு கற்றுத் தருவது அதற்குக் காரணம்,” என்கிறார் ஷ்ரினா.
அடுத்ததாக வரும் அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஜப்பானிய சங்கக் காற்பந்துப் போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகி வருகிறார் ஷ்ரினா.