சீரான உடல்நலத்திற்கு மனநலம் முக்கியம் என்பதற்கான அறிவியல் ஆதாரம் வலுவானது.
நாட்பட்ட மன அழுத்தம் எவ்வளவு மோசமானது என்பது குறித்துப் பரவலாக அறியப்பட்டாலும் இந்த ஆண்டு (2025) தெரிவிக்கப்பட்ட புதிய ஆய்வு முடிவுகள் மன அழுத்தத்திற்கும் நீரிழிவு போன்ற நோய்களுக்கும் இடையிலான நேரடித் தொடர்பை வெளிப்படுத்தியுள்ளன.
‘நேச்சர்’ (Nature) எனும் அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவின்படி, மூளைக்கும் கல்லீரலுக்கும் இடையே மன அழுத்தத்தை நேரடியாக இணைக்கும் குறிப்பிட்ட வழித்தடம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மன அழுத்த ஹார்மோன்கள் அதிகப்படியான குளுக்கோஸை (சர்க்கரை) எவ்வாறு ரத்த ஓட்டத்தில் வெளியிடுகின்றன என்பதை இந்த ‘மூளை-கல்லீரல் சமிக்ஞை’ (brain-liver signaling) விளக்குகிறது.
ஆனால், ஒருவர் எப்போதுமே தாம் ஆபத்தில் இருக்கிறோம் எனக் கருதுவது நல்லதன்று. தொடர்ச்சியான மன அழுத்தம் ஏற்படும்போது, இது நீண்ட காலத்தில் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு வித்திடுகிறது.
இந்த அற்புதமான ஆய்வு, அதிக மன அழுத்தத்துடன் வாழும் பலருக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து அதிகம் என்பதற்குத் தெளிவான, உயிரியல் ரீதியான விளக்கத்தை அளிக்கிறது.
மன அழுத்தம் ஒரு தனிப்பட்ட பிரச்சினையன்று என்பதையும் அது மனித உடலில் மிக முக்கியமான அமைப்புகளின் செயல்பாட்டைத் தீவிரமாகச் சீர்குலைக்கிறது என்பதையும் இது காட்டுகிறது.
நீரிழிவு சிகிச்சையையும் மனநல சிகிச்சையையும் பிரித்துப் பார்க்க இயலாது.
தொடர்புடைய செய்திகள்
மன அழுத்தத்தைக் கையாள்வதையும் நீரிழிவுப் பராமரிப்பில் சேர்க்கவேண்டும் என்று அமெரிக்க நீரிழிவுச் சங்கம், இவ்வாண்டு வெளியிட்டுள்ள ஆலோசனைகளில் குறிப்பிட்டுள்ளது.
2025ல் வெளியிடப்பட்ட அனைத்துலக நீரிழிவுக் கூட்டமைப்பின் உலகளாவிய நீரிழிவு அறிக்கை, இந்தச் சிக்கலை மேலும் எடுத்துக்காட்டுகிறது. அதன்படி, 2050ஆம் ஆண்டிற்குள் 850 மில்லியனுக்கும் அதிகமான பெரியவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன அழுத்தம், மனவுளைச்சல், மனநலக் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளுடன் இந்தப் போக்கு தொடர்புடையதாகும்.
இளையர்களின் மன அழுத்தத்தையும் உளைச்சலையும் முறைப்படி களைய முற்படாமல் அவற்றைப் புறக்கணிப்பது பிற்காலத்தில் அவர்களுக்குக் கெடுதலை விளைவிக்கும். மடியிலிருந்தும் மனத்திலிருந்தும் கனத்தை இறக்க முற்படுங்கள்; வழியில் பயமிருக்காது.