தாயகத்தில் இல்லாவிடினும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுவது குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது என்று கூறினார் கட்டுமான மேலாளராகப் பணிபுரிந்து வரும் திரு கார்த்திகேயன், 32.
வேலைக்காகத் தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்திருக்கும் திரு கார்த்திகேயன், “துவாஸ் சவுத் கேளிக்கை நிலையத்தில் நான் தீபாவளியைக் கொண்டாடுவது மூன்றாவது முறை. இங்குள்ள அலங்காரங்கள், விழாக்கால உணர்வை அதிகமாக்குகின்றன.
“நிகழ்வில் வழங்கப்பட்ட உணவு, இசையோடு, கூடியிருக்கும் வெளிநாட்டு நண்பர்களைப் பார்க்கையில் சமூகத்துடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாட இது நல்ல வாய்ப்பாக இருந்தது,” என்றார்.
தீபாவளித் திருநாளை முன்னிட்டு துவாஸ் சவுத் கேளிக்கை நிலையம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
வெளிநாட்டு ஊழியர்களிடையே தீபாவளி மணம் பரப்பிய இந்தச் சிறப்பு நிகழ்ச்சியை என்டியுசி கிளப் நடத்தியது. துவாஸ் சவுத் தெருசான், பெஞ்சுரு, சூன் லீ ஆகிய பொழுதுபோக்கு மன்றங்களில் இந்நிகழ்ச்சி அக்டோபர் 31ஆம் தேதி மாலை நடைபெற்றது.
இசை, நடனம், பாடல், விளையாட்டு, அதிர்ஷ்டக் குலுக்கு என வெளிநாட்டு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் ஏராளமான கலை, கலாசார நிகழ்ச்சிகளும் அடங்கிய இந்நிகழ்வில் 38,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்றனர்.
கப்பல் பட்டறையில் மூவாண்டுகளாகப் பணிபுரிந்துவரும் இந்திய ஊழியர் திரு பார்த்திபன், 27, ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிக் கொண்டாட்டம் தனித்துவத்துடன் புதியதொரு மகிழ்வைத் தரத் தவறியதேயில்லை என்றார்.
“ஏராளமான வெளிநாட்டு நண்பர்களுடன் பண்டிகையைக் கொண்டாடுவது இனிமையான அனுபவம். ஒன்றாக இணைந்து இத்தகைய கொண்டாட்டங்களில் பங்குபெறுவது உற்சாகத்தை மிகுதியாக்குகிறது,” என்றார் திரு பார்த்திபன்.
தொடர்புடைய செய்திகள்
என்டியுசி கிளப்பின் வெளிநாட்டு ஊழியர்கள் கேளிக்கை நிலையங்களுக்கான (MWRC) இயக்குநர் இங் சின் அய்ன், வெளிநாட்டு ஊழியர்களுக்கான இவ்வாண்டுக் கொண்டாட்டங்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகத் தனித்து நிற்கின்றன என்றார்.
“வெளிநாட்டு ஊழியர்களின் நல்வாழ்வில் மிகுந்த கடப்பாடு கொண்டுள்ளோம். இத்தகைய அர்த்தமுள்ள செயல்பாடுகள் மூலம், வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் தனியாக இல்லை என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கிறோம்,” என்றார் என்டியுசி கிளப்பின் வெளிநாட்டு ஊழியர்கள் கேளிக்கை நிலையங்களுக்கான (MWRC) இயக்குநர் இங் சின் அய்ன்.