புது ஆண்டு தொடங்கும்போது நம்மில் பலர் புத்தாண்டுத் தீர்மானங்களை மேற்கொள்வது வழக்கம். குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்வது, உடல் எடையைக் குறைப்பது போன்றவை அவற்றில் அடங்கும்.
உடற்பயிற்சி இலக்குகளை அடைவதற்கு முன்பைவிட இப்போது பல வாய்ப்புகள் உள்ளன. சிலர் ஒரு தனிப்பட்ட பயிற்சியாளரின் நேரடி வழிகாட்டுதலில் சிறப்பாகச் செயல்படுவார்கள்.
அதே நேரம் மற்றவர்கள் தங்கள் பரபரப்பான வாழ்க்கை முறைக்கு ஏற்ப நீக்குப்போக்குடன் குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய ‘ஃபிட்னஸ் ஆப்’ எனும் செயலி மூலம் இலக்குகளை அடைகிறார்கள்.
ஆனால் இதில் எது சிறந்த தேர்வு?
பயிற்சியாளர்கள் சான்றிதழ் பெற்ற உடற்பயிற்சி நிபுணர்கள் ஆவர். அவர்கள் பொதுவாக உடற்பயிற்சிக் கூடம் அல்லது தனியார் பயிற்சி மையங்களில் வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் உடல்நலம், உடற்பயிற்சி இலக்குகளை அடைய உதவுகிறார்கள்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்றத் தனிப்பயனாக்கப்பட்ட உடற்பயிற்சித் திட்டங்கள், நேரடி வழிகாட்டுதல், தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.
இது வாடிக்கையாளர்கள் தங்களது உடற்பயிற்சி முறைகளை மேம்படுத்தவும், ஊக்கத்துடன் செயல்படவும், பாதுகாப்பான முறையில் முன்னேறவும் உதவுகிறது.
நேரடிக் கண்காணிப்பு, உடனடி ஆலோசனைகள், உடற்பயிற்சி முறைகளை நேரில் திருத்தி அமைப்பதன் மூலம் பயனடைய விரும்பும் நபர்களுக்குச் சிறந்த தேர்வாகும்.
தொடர்புடைய செய்திகள்
உடற்பயிற்சிப் பயணத்தைப் புதிதாகத் தொடங்குபவர்களுக்கும் அல்லது முறையான உடற்பயிற்சி நுட்பங்களை அறியாதவர்களுக்கும் தனிப்பட்ட நேரடிப் பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது.
ஏனெனில், பயிற்சியாளர் ஒவ்வோர் அசைவையும் பாதுகாப்பாக வழிநடத்துவதுடன், உடற்பயிற்சிக் கருவிகளை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பதையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பார்.
இதற்கு மாறாக உடற்பயிற்சிச் செயலிகள், மின்னிலக்க மென்பொருள் தளங்களாகும். அவை பயனர்கள் தங்களின் உடல்நலம், உடற்பயிற்சி இலக்குகளைத் தங்களின் உள்ளங்கையிலிருந்தே எளிதாக அடைவதற்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
நேரடித் தனிப்பயிற்சி போலன்றி, உடற்பயிற்சிச் செயலிகள் நீக்குப்போக்கையும் எளிதான அணுகலையும் வழங்குகின்றன.
இவை பயனர்கள் சந்திப்பு நேரங்களுக்காகக் காத்திருக்காமலும், இடக் கட்டுப்பாடுகள் இல்லாமலும், தங்களுக்கு விருப்பமான இடத்தில் தங்களின் சொந்த நேர அட்டவணைப்படி உடற்பயிற்சி செய்யவும் அனுமதிக்கின்றன.
உடற்பயிற்சிச் செயலிகள் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம். அதிகப் பணம் செலவழிக்காமல் தங்களின் உடல்நலம், உடற்பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்க விரும்புவோருக்கு இவை ஈர்க்கும் விருப்பமாக அமைகின்றன.
பல செயலிகள் மலிவான சந்தாத் திட்டங்களை வழங்குவதாலேயே இந்தச் சிக்கனம் சாத்தியமாகிறது. பெரும்பாலும் இக்கட்டணம் நேரடித் தனிப்பயிற்சி வகுப்புகள் அல்லது உடற்பயிற்சிக் கூடங்களின் உறுப்பினர் கட்டணங்களைவிட மிகக் குறைவாகவே உள்ளது.
பல உடற்பயிற்சிச் செயலிகள் பல்வேறு வகையான உறுப்பினர் தெரிவுகளை வழங்குகின்றன. எனவே, மக்கள் ஒரு பொதுவான இணையத்தள உடற்பயிற்சித் திட்டத்தையோ கூடுதல் அம்சங்கள், தனிப்பட்ட ஆதரவு கொண்ட திட்டத்தையோ தேர்ந்தெடுத்தாலும் அவர்களின் தேவைக்கு ஏற்றச் சிறந்த திட்டத்தை அவர்களே தேர்வு செய்ய முடிகிறது.

