கவலையைத் தவிர்க்கவும், ‘gov.sg’ காணவும்

கவலையைத் தவிர்க்கவும், ‘gov.sg’ காணவும்

2 mins read
அரசாங்க அமைப்புகளில் அனுப்பும் குறுஞ்செய்திகளை இனி எளிதாக உறுதிசெய்யலாம்.
31587843-30d9-47ec-8f81-d94602fa7116
மோசடிக்காரர் போன்ற மாதிரி படம் - படம்: கெட்டி இமேஜஸ்

பெற்றோரிடமிருந்து வழக்கமான குறுஞ்செய்தி தகவல் வந்தது: உறுதிசெய்யப்படாத இணைப்புகளைக் கொண்ட குறுஞ்செய்திகளைப் பெற்ற அவர்கள் அதைப் படம் பிடித்து அனுப்பிவைத்துள்ளனர்.

“இது உண்மையானதா? நான் சொடுக்கலாமா?,” என தங்களது 60களில் உள்ள குமாரி சியாவ் சின் எர்ரின் பெற்றோர்கள் கேட்பதுண்டு.

இந்தக் குறுஞ்செய்திகள் மத்திய சேமநிதி (CPF), சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (IRAS) போன்ற அமைப்புகளிலிருந்து வருவது போன்ற பாவனையைக் கொண்டுள்ளன, என்கிறார் 32 வயது தொடர்புத் துறை நிபுணரான அவர்.

அரசாங்க அமைப்புகள் போன்ற பாவனை செய்து தூண்டிலிடுதல் மோசடி உட்பட மோசடிகளின் குற்றப் பதிவுகள் குறுஞ்செய்திகளைப் பெற்றதுமே முதியோரை பதற்றம் அடையச் செய்கின்றன. ஆனால் “இது அரசாங்கத்திடமிருந்து வரும் அதிகாரபூர்வ குறுஞ்செய்தியாக இருக்குமோ” என்ற கவலையையும் அவர்களுக்குத் தருவதாக குமாரி சியாவ் கூறுகிறார்.

இப்போது அரசாங்கத்திடமிருந்துதான் குறுஞ்செய்தி வருகிறது என்பதை அறிய எளிதான வழி உண்டு.

கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அரசாங்கத்திடமிருந்து வரும் குறுஞ்செய்திகளில் “gov.sg” என்று அனுப்புநர் அடையாளம் இருக்கும். தேசிய சேவை தகவல்கள், அவசரகால சேவைகள் இதிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. முழு பட்டியலை sms.gov.sg/exceptions எனும் இணையப்பக்கத்தில் காணலாம்.

இந்த gov.sg அனுப்புநர் அடையாளம் “குறுஞ்செய்தி மூலம் வரும் அரசாங்கத் தொடர்புகள் உண்மையானவை என்று பொதுமக்களால் மேலும் உறுதியுடனும் சரியாகவும் உறுதிசெய்வதை எளிதாக்குகிறது,” என்றார் ஓபன் கவர்மண்ட் புரொடக்ட்ஸ் (Open Government Products) அமைப்பின் கொள்கைப் பிரிவு உதவி இயக்குநர் ஹிஜின் ஃபெர்னாண்டஸ்.

“gov.sg போன்ற போலி அனுப்புநர் அடையாளங்கள் வந்தால் அந்தக் குறுஞ்செய்திகளை உடனடியாக தொலைத்தொடர்புச் சேவை வழங்குபவர்களும் குறுஞ்செய்தி அனுப்பும் சேவை நடத்துநர்களும் முடக்கிவிடுவார்கள்,” என்றும் அவர் கூறினார்.

Open Government Products என்பது அரசாங்க தொழில்நுட்ப அமைப்பின் ஓர் அங்கம். அந்தப் பிரிவு பொதுமக்களின் பரந்தப்பட்ட தேவைகளுக்காக தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

எளிதாக உறுதிசெய்யலாம்

அரசாங்கத்திடமிருந்து வரும் குறுஞ்செய்திகள் கீழ்வரும் நான்கு அடையாளங்களைக் கொண்டிருக்கும்: 

  1. அனுப்புநர் அடையாளம் gov.sg என சிறிய எழுத்துகளில் இருக்கும்.
  2. குறுஞ்செய்தியின் தொடக்கத்தில் அனுப்பும் அமைப்பின் முழுப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.
  3. குறுஞ்செய்தியின் முடிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும்: “This is an automated message sent by the Singapore Government.”
  4. gov.sg எனும் அடையாளத்திலிருந்து வரும் குறுஞ்செய்திகள் வெவ்வேறு அமைப்புகளிலிருந்து வந்தாலும் ஒரே தொடர்புப் பக்கத்திலேயே காணப்படும்.

இந்த முயற்சியை வரவேற்கிறார் குமாரி சியாவ். “குழப்பங்களைப் பெரிய அளவில் தவிர்ப்பதால் என் பெற்றோர் போன்ற மூத்த தலைமுறையினருக்கு இது உதவியாக இருக்கும் என்பதில் உறுதி.” என்றார்.

“அனுப்புநர் அடையாளத்தை gov.sg எனும் ஒரே குடையின்கீழ் கொண்டுவருவது அரசாங்கம் போன்ற ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி குறுஞ்செய்திகளில் மக்கள் சிக்குவதைக் குறைக்க உதவும்,” என்று கூறுகிறார் சிங்கப்பூர் காவல்துறையின் மோசடித் தடுப்–புப் பொதுக் கல்வி அலு–வ–ல–கத்தின் உதவி இயக்குநர் காவல்துறைக் கண்காணிப்பாளர் மேத்தியூ சூ.

அரசாங்க அதிகாரிகள், குறிப்பாக காவல்துறை அதிகாரிகள், கீழ்வருபவற்றை என்றும் தொலைபேசி அழைப்பு மூலமோ குறுஞ்செய்தி மூலமோ செய்யச் சொல்லமாட்டார்கள் என்று வலியுறுத்தினார் அவர்.

  1. வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புவது;
  2. உங்கள் தனிப்பட்ட, வங்கி, சிங்பாஸ், மத்திய சேமநிதி சார்ந்த தகவல்களைக் கேட்பது;
  3. வங்கி இணையப்பக்கங்களுக்கு இட்டுச்செல்லும் இணைப்புகளைச் சொடுக்கச் சொல்வது; அல்லது
  4. செயலிகள், பிற இணையத்தளங்களின் மென்பொருள்களைப் பதிவிறக்கம் செய்யச் சொல்வது.

குறுஞ்செய்தி மோசடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்

ஸ்கேம்ஷீல்டையும் பாதுகாப்பு அம்சங்களையும் சேர்க்கவும்

  1. ஸ்கேம்ஷீல்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்து மோசடி அழைப்புகளிலிருந்தும் குறுஞ்செய்திகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
  2. மோசடி நோக்கத்திலான இணைப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வைரஸ் தடுப்புச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவும்.
  3. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு அழைப்புகளைத் தடுக்கும் தெரிவுகளைப் பரிசீலிக்கவும்.
  4. இணைய வங்கி பரிமாற்றங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை அமைத்துக்கொள்ளவும். இரண்டு அல்லது பல அடுக்கு உறுதிப்பாட்டை வங்கி, மின்-கைப்பை போன்றவற்றுக்கு அமைத்துக்கொள்ளவும்.
  5. உங்கள் வங்கி சேமிப்பின் ஒரு பகுதியை மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ‘மணி லாக்’ (Money Lock) செய்வதைப் பரிசீலிக்கவும்.   

மோசடியை அடையாளம் காண அதிகாரபூர்வ வழிகளை நாடவும்

  1. அரசாங்க அமைப்புகளிலிருந்து வருவதாக குறுஞ்செய்திகள் வந்தால் அவற்றில் gov.sg என்பது அனுப்புநர் அடையாளத்தில் இல்லை எனும் பட்சத்தில் அவற்றை புறக்கணிக்கவும்.
  2. அதிகாரபூர்வ வழிகளில் மட்டும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவும். மாறாக அனுப்பிவைக்கப்படும் இணைப்புகளைச் சொடுக்கவேண்டாம்.
  3. உங்களின் நிலை மோசடியாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டால் 1800-722-6688 எனும் எண்ணில் மோசடித் தடுப்பு உதவியை நாடுங்கள்.

அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்லவும்

  1. மோசடி பரிவர்த்தனைகளை வங்கியிடம் உடனே தெரிவித்து காவல்துறையிடம் புகாரளியுங்கள்.
  2. ஆக அண்மைய மோசடி தடுப்பு ஆலோசனைகளுக்கு தேசிய குற்றத் தடுப்பு மன்றத்தின் ScamAlert வாட்ஸ்அப் பக்கத்தைப் பின்தொடர்ந்து அதனை குடும்பத்தினர், நண்பர்களுடன் பகிருங்கள்.

சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து வழங்கப்படுகிறது

குறிப்புச் சொற்கள்