மீண்டு வர மீண்டும் வாழ வாய்ப்பளிக்கும் ‘எக்மோ’ உயிர்காக்கும் சிகிச்சை

4 mins read
20413b71-1ede-4692-9716-5cf1eb39fa55
உதவி இணைப் பேராசிரியரும் தீவிர சிகிச்சைப் பிரிவின் மூத்த நிபுணத்துவ மருத்துவருமான கே ஆர் ராமநாதன், ‘என்யுஎச்’ மறுவாழ்வுத் துறையின் உடல் இயக்கச் சிகிச்சை ஆய்வுப் பிரிவின் தலைவர் மருத்துவர் கீதா காயாம்பூ ஆகியோருடன் ‘அவேக் எக்மோ’ சிகிச்சை பெற்றுக்கொண்ட நாதன் டான்.   - படம்: இளவரசி ஸ்டீஃபன்
multi-img1 of 2

நடனமே இவருக்குச் சுவாசம். இந்த இளையர் பெயர் நாதன் டான், 30 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எதிர்பாராவிதமாக நிமோனியா பாதிப்பால்  இவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டபோது, ‘எக்மோ’ சிகிச்சை வழங்கப்பட்டது. 

பின்னர் உடல்நலன் குன்றியதால் முழங்காலுக்குக் கீழுள்ள பகுதி அறுவை சிகிச்சை மூலம்  அகற்றப்பட்டது. இனி நடனம் ஆட முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார் டான்.  

அவரைப் போலவே எக்மோ உயிர்காக்கும் சிகிச்சை பெற்ற மற்றொருவர், தாதியர் கல்வி பயிலும் மாணவி குவெண்டலின் லைய், 22 (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  இதயம் செயலிழந்ததால் இனி உயிர் பிழைப்போமா என்ற அச்சத்தில் மூழ்கினார் இந்த இளையர்.

கடுமையான நோயின் தாக்குதலுக்கு ஆளானபோதும் ஆரம்பநிலையிலேயே அவர்களுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை, மறுவாழ்வு சார்ந்த சுகாதார முயற்சி ஆகியவற்றின் வாயிலாக இவ்விரு நோயாளிகளும் மீண்டு வந்தது மட்டுமல்லாது, பிடித்த செயல்களைச் செய்யவும் தொடங்கிவிட்டனர்.

வாழ்க்கைப் பயணம் இளம் வயதிலேயே முடிந்துவிடுமோ என்ற நிலையில் அவர்கள் கடந்து வந்த இந்தப் போராட்டம், அவர்கள் வாழ்க்கையை மீட்டெடுக்க ‘எக்மோ’ சிகிச்சை முறை நல்கிய நல்வாழ்வின் பெருந்தாக்கத்தை உணர்த்துகிறது. 

இதயம், நுரையீரல் என முக்கிய உறுப்புகள் செயலிழந்து தீவிர நோய்வாய்ப்பட்ட நிலையில் உள்ளோர் வாழ்வதற்கான இரண்டாவது வாய்ப்பைத் தருகிறது ‘எக்மோ’ சிகிச்சை. 

இச்சிகிச்சையின்போது, உயிர்வாயு செயற்கையான முறையில் தரப்படுகிறது.

ஆங்கிலத்தில் ‘Extracorporeal membrane oxygenation’ என்பதன் சுருக்கமே எக்மோ சிகிச்சை. ஒருவரது இதயமும் நுரையீரலும் போதுமான அளவு இயங்காதபோது, ரத்த ஓட்டம் தடைபடுகிறது. நுரையீரலுக்குச் செல்லும் உயிர்வாயுவின் அளவும் குறைகிறது. இந்த இயந்திரத்தைப் பொருத்துவதன் மூலம் ரத்தம் உடலிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு, உயிர்வாயு செலுத்தப்பட்ட பிறகு மீண்டும் உடலுக்குள் அனுப்பப்படுகிறது. 

கடினமான செயல்முறையாக இருந்தாலும் இந்தத் தனித்துவமான சிகிச்சையை அளிக்க தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, தேசியப் பல்கலைக்கழக இதய நோய் சிகிச்சை நிலையத்தில் (என்யுஎச்சிஎஸ்) அர்ப்பணிப்பு மிகுந்த சுகாதார வல்லுநர்கள் உள்ளனர்.

மேலும், இவர்கள் குறிப்பிடத்தகுந்த விதமாக அரிய வகை அணுகுமுறையாக இருந்தாலும்  ‘அவேக் எக்மோ’ எனும் சிகிச்சையை நோயாளிகள் மீண்டும் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அளிக்கின்றனர்.

விழிப்பு நிலையில் அளிக்கப்படும் இம்முறை ‘அவேக் எக்மோ’ என்று குறிப்பிடப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் ‘எக்மோ’ சிகிச்சை பெறும் நோயாளிகள் முழுமையான ஆழ்மயக்க நிலைக்குச் செல்லாமல் இந்தச் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள இயலும். 

நோயாளிகள் நினைவிழந்த நிலைக்குச் செல்லாமல் சிகிச்சை  பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில், தங்களுக்கான மருத்துவப்  பராமரிப்புச் சேவைகளை வழங்கும் குழுவினருடன் கலந்துரையாடவும் முடியும்.

2023ஆம் ஆண்டிலிருந்து இம்முறையைப் பயன்படுத்தி தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையும் தேசியப் பல்கலைக்கழக இதயநோய் சிகிச்சை நிலையமும் (என்யுஎச்சிஎஸ்) இணைந்து நான்கு நோயாளிகளுக்கு வெற்றிகரமாகச் சிகிச்சை அளித்துள்ளன.

பொதுவாக இந்தச் சிகிச்சை முறைக்கு ஆட்படுத்தப்படுவோர் மருத்துவ முறையில் உணர்விழந்த முழுமயக்க நிலைக்குக் கொண்டுசெல்லப்படுவர். எனினும், விழிப்பு நிலையில் இச்சிகிச்சையைப் பெற்றுக்கொள்வோர் மனநிலை குறித்துப் பகிர்ந்து கொண்டார் உதவி இணைப் பேராசிரியரும் தீவிர சிகிச்சைப் பிரிவின் மூத்த நிபுணத்துவ மருத்துவருமான கே ஆர் ராமநாதன். 

“எல்லா நோயாளிகளும் விழிப்பு நிலையில் ‘எக்மோ’ தருவதற்கான நிலைக்குத் தகுதி பெறுவதில்லை. இதற்கு நோயாளிகளைத் தேர்வு செய்வது மிகவும் முக்கிய கூறுகளை உள்ளடக்கியது,” என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய திரு ராமநாதன், “நோயின் கடுமை,  சுவாசம் தடையின்றிச் செல்வதற்கு ஏதுவாகச் சிக்கலற்ற மூச்சுப் பாதை, மயக்க நிலைக்குச் செல்லாமல் அளிக்கப்படும் உயிர்காக்கும்  ‘எக்மோ’ சிகிச்சையைத் தாங்குவதற்கான உடல் நிலை எனப் பலவற்றைப் பல்வேறு துறைகள் சார்ந்த மருத்துவர் குழு கவனத்தில் கொள்ளும்,” என்றார்.

சில நோயாளிகளுக்கு ஆழ்மயக்க நிலையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையே பாதுகாப்பானது என்று குறிப்பிட்ட அவர், அதற்குப் பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆரம்பகட்டத்தில் கிடைக்கப்பெறும்  மறுவாழ்வு சார்ந்த சுகாதார சிகிச்சைகள், அவர்கள் நலிவடையாமல் காக்கவும்,  தசைகள் வலுவடையவும் உதவும் என்றார். 

இக்கூற்றை ஆய்வுகள் கண்டறிந்ததாகச் சொன்ன திரு ராமநாதன், “இது நோயாளிகளின் பராமரிப்பாளர்களுக்கும் பெரிதும் பயனளிக்கிறது,” என்றும் சொன்னார்.

இதற்கிடையே நோயாளிகள் நலம் பெறுவதில் உடல் சார்ந்த மறுவாழ்வுப் பயிற்சிகள் எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்று பகிர்ந்துகொண்டார் ‘என்யுஎச்’ மறுவாழ்வுத் துறையின் உடல் இயக்க சிகிச்சை ஆய்வுப் பிரிவின் தலைவர் மருத்துவர் கீதா காயாம்பூ.

“தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால் ஏற்பட்ட சோர்வு, பலவீனம் ஆகியவற்றைத் தணிக்கவும் போக்கவும் இத்தகைய பயிற்சிகள் மிகவும் முக்கியம்.

‘‘எனினும் மயக்க நிலையில் ‘எக்மோ’ சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு இத்தகைய மறுவாழ்வு சார்ந்த பயிற்சிகளை அளிப்பது மிகவும் சவால்மிக்கது,” என்றார் திருவாட்டி கீதா.

ஆனால் தற்போது ‘விழிப்பு நிலை’ எக்மோ சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இலக்குடன் கூடிய உடல் அசைவுகள் உள்ளிட்ட பயிற்சிகளை அளிப்பது அவர்கள் நோய்ப்படுக்கையிலிருந்து விரைவாக நல்வாழ்விற்குத் திரும்ப உதவுகிறது என்றார் அவர். 

மேலும், இவ்வகை சிகிச்சை பெற்ற  குமாரி குவென்டலின் நான்கு நாள்களில் ‘விழிப்பு நிலை எக்மோ’ சிகிச்சைப் பிரிவிலிருந்து உடல்நலம் தேறினார் என்றும், இது பாரம்பரிய எக்மோ சிகிச்சை முறை பெற்ற நோயாளி  உடல்நலம் தேற எடுத்துக்கொள்ளும் நேரத்தில் பாதி என்பது கவனிக்கத்தக்கது என்றும் விளக்கினார் திருவாட்டி கீதா.

தற்போது அந்த இளையர் நன்றாகக் குணமடைந்து அவர் பயின்று வந்த தாதிமை படிப்புக்கும் திரும்பியுள்ளார். விரைவாக அவர் குணமடைந்த விதமும், உடல்நலம் தேறியதும் எக்மோ அவருக்கு உயிர் வாழ மட்டுமல்லாமல், முழுமையாக நோயின் தாக்கத்திலிருந்து மீண்டு வரவும் ஆதரவளித்திருப்பதற்கான எடுத்துக்காட்டு.

தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிக் கருத்துரைத்த நடன ஆர்வலர் டான், உடல் இயக்க சிகிச்சையாளர் தனது ஆர்வத்தை அறிந்து, தனக்கான பயிற்சிகளை நடன அசைவுகளுடன் அமைத்திருந்ததை நினைவுகூர்ந்தார்.

“புத்தாக்கமிக்க பயிற்சி முறைகளால் எனக்குள்ளும் ஒரு தகுதியுள்ளது என்பதை மீண்டும் உணரச் செய்தார் என் மருத்துவர். அண்மையில் நடைபெற்ற லேடி காகா இசை நிகழ்ச்சிக்குச் சென்று நடனமாடி மகிழ்ந்தேன். என் நம்பிக்கையை மீண்டும் பெற்றுவிட்டேன்,” என்றார் டான்.   

குறிப்புச் சொற்கள்