தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
நன்கொடையாளரின் நற்பயணம் 

உயிர்காக்கும் எலும்பு மஜ்ஜை நன்கொடை

3 mins read
0fbc824f-a21a-4cd9-9641-13f4fa8c8b6b
எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் முனைவர் தேவநாதன் ரகுநாதன். - படம்: எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டம்

மருத்துவராக இல்லாவிடினும் ஒருவரின் உயிரைக் காக்கும் வாய்ப்பைப் பெறவேண்டும் என்றால் எலும்பு மஜ்ஜை நன்கொடை வழங்குவதன் வழி அதைப் பெறமுடியும் என்கிறார் முனைவர் தேவநாதன் ரகுநாதன்.

44 வயதாகும் தேவநாதன் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர். உயிர் காக்கும் இந்த நன்கொடைப் பயணத்தில் இவரது பங்களிப்பு குறித்து அறிந்துவந்தது தமிழ் முரசு.

சில ஆண்டுகளுக்கு முன்பு  சாலைக் கண்காட்சி ஒன்றில் எலும்பு மஜ்ஜை தானம் குறித்து அறிந்துகொண்டதாகக் கூறினார் தேவநாதன். 

“எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர்களுக்கான தேவை, முக்கியத்துவம், கொடையாளர்கள் பற்றாக்குறை பற்றி அறிந்து அதனால் ஏற்பட்ட உந்துதலால் இந்த நன்கொடைக்கு முன்பதிவு செய்தேன். 

“சில ஆண்டுகள் கழித்து எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டம் (பிஎம்டிபி) எனும் அமைப்பில் இருந்து அண்மையில் அழைப்பு வந்தது,” என்றார் அவர்.

“என்னுடைய நண்பர் ஒருவரும் அதற்கான ஆர்வத்தைப் பதிவு செய்திருந்தார். ஆனால் அவருக்கு அழைப்பு வரவில்லை. நன்கொடை செய்ய நம் விருப்பத்தைத் தெரிவித்தாலும் அதற்காகத் தேர்வு செய்யப்படவேண்டும்,” என்றார்  திரு தேவநாதன்.

இறந்த பிறகு என் உறுப்புகளை மற்றவர் தானம் செய்தால் அது குறித்து எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், உயிருடன் இருக்கும்போதே என்னுள் உள்ள ஒரு சிறிய பகுதியைத் தானம் அளித்து பிறர் நலன் காக்க இயலும் என்பது மனநிறைவு தருகிறது.
முனைவர் தேவநாதன் ரகுநாதன், 44

இதுகுறித்து மனைவியிடமும் இரு மகள்களிடமும் தெரிவித்தபோது, நற்செயல் என்று பிள்ளைகள் பாராட்டினாலும், மனைவிக்குப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததாகக் குறிப்பிட்டார் தேவநாதன். 

“எந்த முறையில் எலும்பு மஜ்ஜை சேகரிக்கப்படும்? இந்த நன்கொடைப் பயணம் எளிதானதா? எனப் பற்பல ஐயங்களை முன்வைத்தார் என் மனைவி. அவரின் சந்தேகங்களுக்கு என் மருத்துவ நண்பர்கள் விளக்கம் கொடுத்தனர். பிறகு, அவரும் இதற்கு மனமுவந்து ஆதரவு கொடுத்தார்,” என்று விவரித்தார் தேவநாதன்.

நன்கொடையாளராகத் தேர்வு செய்யப்பட்டவுடன், ‘பிஎம்டிபி’ அமைப்பின் பிரதிநிதிகளும் மருத்துவக் குழுவினரும் உரிய விளக்கங்களை அளித்ததாக அவர் கூறினார்.

எலும்பு மஜ்ஜை நன்கொடைக்குப் பதிவுசெய்த பிறகு, தமக்கு நீரிழிவுப் பாதிப்பு கண்டறியப்பட்டதையும் நன்கொடை அளிக்க அது ஒருவேளை தடையாக இருக்குமோ என்று அஞ்சியதையும் நினைவுகூர்ந்தார் தேவநாதன்.

“பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள், மருத்துவர்களுடனான கலந்துரையாடல்களுக்குப் பிறகு நான் பொருத்தமான நன்கொடையாளர் என உறுதிச்செய்யப்பட்ட தகவலை அறிந்தவுடன், யாரோ ஒருவரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை எண்ணி அதை நற்பேறாகக் கருதினேன்,” என்றார் அவர்.

எலும்பு மஜ்ஜை சேகரிப்பு முறை பற்றியும் அவர் சொன்னார்.

நன்கொடையளிக்கும் நாளன்று, ஒரு தனியறைக்குள் சென்று 10 அல்லது 12 மணி நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த அனுபவத்தைக் கூறினார்.

“மிகவும் பாதுகாப்பான, இலகுவான செயல்முறையாக இருந்தது. எலும்பு மஜ்ஜைகள் சேகரிப்பின்போது கைகளை மட்டும் அவ்வளவாக அசைக்க முடியவில்லை. மற்றபடி இயல்பாகத்தான் இருந்தேன். வலி ஏற்படுமோ என்ற அச்சமே தேவையில்லை,” என்றார் தேவநாதன்.

“இறந்தபிறகு என் உறுப்புகளை மற்றவர் தானம் செய்தால் அது குறித்து எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் உயிருடன் இருக்கும்போதே என்னுள் உள்ள ஒரு சிறிய பகுதியைத் தானமாக அளித்துப் பிறர் நலன் காக்க இயலும் என்பது மனநிறைவைத் தருகிறது,” என்றார் அவர்.

முனைவர் தேவநாதன் ரகுநாதன்.
முனைவர் தேவநாதன் ரகுநாதன். - படம்: எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டம்

தன் குடும்பத்தில் இவ்வகை தானம் செய்திருக்கும் முதல் நபராகத் திகழும் தேவநாதன், “இந்த தானத்தால் பயன்பெற்றவர், பிற்காலத்தில் என்னைச் சந்திக்க விரும்பினால் நானும் அவரைச் சந்திக்க விரும்புகிறேன். மீண்டும் ஒருமுறை இந்த நன்கொடை செய்ய வாய்ப்பு கிடைத்தால் மனமார  நிறைவேற்றுவேன்,” என்று கூறினார். 

2023ஆம் ஆண்டு மொத்த எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள்.
2023ஆம் ஆண்டு மொத்த எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள். - தகவல்: எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டம்

ஒவ்வொருவருக்கும் உரிய பொருத்தமான ரத்த வகையைத் தேர்வு செய்வதைக் காட்டிலும் எலும்பு மஜ்ஜை தானத்திற்கான நோயாளிகள் மற்றும் நன்கொடையாளர்களைத் தெரிவு செய்வது மிகவும் கடினம் என்று அமைப்பு தெரிவித்தது.

சிங்கப்பூரின் முதல் மற்றும் ஒரே எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் அமைப்பான ‘பிஎம்டிபி’ பதிவகத்தில் உள்ள 123,866 எலும்பு மஜ்ஜைக் கொடையாளர்களில் மலாய் இனத்தவர் 8 விழுக்காடு என்றும் இந்தியர்கள் ஏறக்குறைய 9 விழுக்காடு என்றும் கூறப்பட்டது.

நோயாளியின் இனத்தைச் சார்ந்தவர் அவருக்கு ஆகப் பொருத்தமான நன்கொடையாளராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதைக் குறிப்பிட்ட அமைப்பு, பொதுமக்கள் குறிப்பாக மலாய், மற்றும் இந்தியச் சமூகத்தினர் நன்கொடையாளர்களாகப் பதிவு செய்துகொள்ள முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தது.

குறிப்புச் சொற்கள்