பொதுவாக, முட்டையின் மஞ்சள் கருவில் அதிகக் கொழுப்பு இருப்பதால் அது இதயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பது சிலரின் நம்பிக்கை.
ஆனால், முட்டைகளை மிதமான அளவிற்கு உணவுடன் சேர்த்துக்கொள்வதால் நல்ல கொழுப்பின் (HDL cholesterol) அளவு மேம்படும் என்றும் இதய நோய் அபாயம் குறையும் என்றும் அண்மைய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சி முடிவுகள் காட்டின.
அவ்வகையில், ஒரு நாளைக்கு ஒரு முட்டை உண்பது நல்லது.
புரதச் சத்து நிறைந்த முட்டைகளை பெரும்பாலும் தீவிர உடற்பயிற்சி மேற்கொள்வோர் அதிகம் உண்பதுண்டு. முட்டையிலிருக்கும் புரதமும் பிற ஊட்டச்சத்துகளும் தசை வளர்ச்சிக்கு உதவும்.
மேலும், முட்டை உண்டபின் வயிறு நிறைந்துவிட்டதுபோல் உணர்ந்தாலும் அதில் வெறும் 70 கலோரி மட்டுமே உள்ளது. இதனால், உடல் எடையைக் குறைப்பதற்கும் முட்டை ஒரு சிறந்த உணவுத் தெரிவாகும்.
இருப்பினும், முட்டைகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும் உணவுவகைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
முட்டைகளை வெண்ணெய் அல்லது பன்றி இறைச்சி போன்ற நிறைவுற்ற கொழுப்பு மிக்க உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் அது கெட்ட கொழுப்பு அதிகரிக்க வழிவகுக்கும்.
கெட்ட கொழுப்பின் அதிகரிப்பை தடுக்க ஆலிவ் அல்லது வெண்ணெய்ப் பழ (Avocado) எண்ணெய் போன்ற நிறைவுறா கொழுப்பு உள்ள உணவுப்பொருள்களுடன் சேர்த்து முட்டை உண்ணலாம்.
பெரும்பாலான ஊட்டச்சத்துகள் மஞ்சள் கருவில் இருப்பதால், அதிகக் கொழுப்புள்ள் நிறைவுற்ற கொழுப்புள்ள உணவுகளை கட்டுக்குள் வைத்து, முட்டையின் மஞ்சள் கருவை உணவில் சேர்த்துக்கொள்வதும் நல்லது.