‘ஈர நிலம்’ நூல் வெளியீட்டு விழா

‘ஈர நிலம்’ நூல் வெளியீட்டு விழா

2 mins read
cc9b55e2-8c14-45d6-9114-c44e9ebf200d
சிறப்பு விருந்தினர் து.அழகிய பாண்டியன் நூலை வெளியிட, கழகத்தின் முன்னாள் தலைவர் நா.ஆண்டியப்பன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். - படம்: ஏற்பாட்டுக் குழு

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் எழுத்தாளர் மணிமாலா மதியழகனின் ‘ஈர நிலம்’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) தேசிய நூலகத்தில் நடைபெற்றது.

விழாவில் வரவேற்புரையாற்றிய கழகச் செயலாளர் பிரேமா மகாலிங்கம், கதைக்களத்தில் எழுத்துப் பயணத்தைத் தொடங்கிய நூலாசிரியர், தேசியக் கலை மன்றம் வழங்கிய ‘சங்கம் ரெசிடென்சி’ திட்டத்தின் வழி ’ஈர நிலம்’ வரலாற்றுப் புதினத்தைச் சிங்கப்பூர் இலக்கியத்திற்கு வழங்கியிருப்பதைப் பாராட்டினார்.

கழகத்தின் முன்னாள் தலைவர் நா. ஆண்டியப்பன் தலைமையுரையில், இந்நூல் சிங்கப்பூரில் வாழ்ந்த நான்கு தலைமுறைகளைப் பற்றிய உண்மையான தகவல்களோடு வந்துள்ளது என்றார்.

எழுத்தாளர் சித்ரா ரமேஷ் வாழ்த்துரையில், மிகச்சிறப்பாக ஆய்வுகளை மேற்கொண்டு நுட்பமாக எழுதப்பட்ட நூல் இது என்றார்.

நூலை அறிமுகம் செய்த அதிபதி அனைத்துலக நாடகக் குழுவின் கலை இயக்குநர் இரா. புகழேந்தி, 32 கதைமாந்தர்கள், காலத்தால் மறைந்த சில இடங்கள் உட்பட 24 இடங்கள் என நாவல் விரித்து எழுதப்பட்டிருப்பதையும் பல வரலாற்றுச் சம்பவங்களைத் தொகுத்துச் சுவைபடக் கதையை நகர்த்தியிருப்பதையும் பாராட்டினார்.

விழாவின் சிறப்பு விருந்தினரான தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைப் பிரிவுத் தலைவர் து. அழகிய பாண்டியன், நாவலில் இடம்பெற்ற பல இடங்கள் மலரும் நினைவுகளாகத் தமது குழந்தைப் பருவத்தை நினைவூட்டியதாகக் கூறினார்.

நூலாசிரியர் தமது ஏற்புரையில், தன்னால் நாவல் எழுத முடியுமா என்ற தயக்கத்தைப் போக்கியது ‘சங்கம் ரெசிடென்சி’ வாய்ப்புதான் என்றார்.

‘ஈர நிலம்’ கதை நடந்த காலகட்டம் குறித்து அறிந்துகொள்ள தேசிய நூலக வாரியம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ள செய்தித்தாள்கள் பெரிதும் உதவின எனக் குறிப்பிட்டதோடு இக்கதைக்குத் தேவையான தகவல்கள் Newspaper SG தளத்தில் இலவசமாகக் கிடைக்கும் தமிழ் முரசு நாளிதழ்களின் மூலம் பெற்றதாகவும் மறந்த, மறைந்த பல கதைகளை அது கண்முன் கொண்டு வருவதாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்