தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் 60வது தேசிய நாளுக்கு ‘யோகா’ மூலம் சிறப்பு

3 mins read
9f23cccf-36a9-49b8-975d-583cdbda8811
‘யோகமும் வாழ்க்கையும்’ அமைப்பு உறுப்பினர்கள் 108 சூர்ய நமஸ்காரங்களை செய்து, யோகாசனப் பயிற்சியின்வழி சிங்கப்பூரை சிறப்பித்தனர். - படம்: வாங்கோ ஸ்டுடியோஸ்

சிங்கப்பூர் தனது 60ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடும் நேரத்தில், இந்தியப் பெண்கள் சிலர் இந்த மைல்கல்லை யோகக்கலையின்வழி நினைவுகூர்ந்தனர்.

‘யோகமும் வாழ்க்கையும்’ எனும் லாப நோக்கமற்ற யோக அமைப்பைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) ‘தேசிய வணக்கம் – நமது சிங்கப்பூருக்கு ஓர் அஞ்சலி’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். - படம்: வாங்கோ ஸ்டுடியோஸ்

செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் ‘த கிராஸ்ரூட்ஸ் கிளப்’பில் ஒன்றுகூடிய அவர்கள், 108 ‘சூர்ய நமஸ்காரங்களைச்’ (ஒருவகை யோகா பயிற்சி) செய்து, யோகாசனப் பயிற்சியின்வழி சிங்கப்பூரைச் சிறப்பித்தனர்.

ஆண்டுதோறும் அனைத்துலக யோகா தினத்தையொட்டி நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, இவ்வாண்டு சிங்கப்பூர் தேசிய தினத்துடன் இணைக்கப்பட்டு ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது என அமைப்பின் நிறுவனரும் யோகா பயிற்சியாளருமான பிரியா சுவாமிநாதன், 49, தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு அவரது வீட்டில் உள்ள ஓர் அறையில் 13 பெண்களுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று 350க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வலுவான சமூகமாக வளர்ந்துள்ளது. பெரும்பாலும் இல்லத்தரசிகளையும் 30 வயதுக்கு மேற்பட்ட இந்தியப் பெண்களையும் கொண்ட இந்த அமைப்பு, இலவச யோகா வகுப்புகளைச் சிங்கப்பூர் முழுவதும் வழங்கி வருகிறது.

இந்தியப் பெண்களின் உடல்நலனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ‘யோகமும் வாழ்க்கையும்’ அமைப்பு, யோகாவுக்கு அப்பால் மனரீதியான ஆதரவையும், ஊட்டச்சத்து விழிப்புணர்வையும், வலுவான சமூக உறவுகளையும் வழங்கும் ஒரு முழுமையான நலவாழ்க்கைத் தளமாகத் திகழ்கிறது.

கொவிட்-19 காலகட்டத்தில், இணையம்வழி செயல்படத் தொடங்கிய அமைப்பு, மேலும் அதிகமான பெண்களைச் சென்றடைந்ததுடன் தொடர்ந்து வகுப்புகளை நடத்த ஆரம்பித்தது.

தற்போது இந்த அமைப்பு இலவச யோகா வகுப்புகளை இணையம்வழி அன்றாடமும் மாதம் ஒருமுறை நேரடி வகுப்பையும் நடத்தி வருகிறது.

இந்நிகழ்ச்சியைப் பற்றிப் பேசிய திருவாட்டி பிரியா, “இந்த நாடு நமக்கு அளித்திருக்கும் அனைத்துக்கும் அன்பும் நன்றியும் செலுத்துவதற்கான முயற்சி இது.

“ஓர் ஆரோக்கியமான பெண், ஓர் ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்குகிறார். அந்தக் குடும்பம் ஒரு வலுவான சமூகமாக உருவெடுக்கிறது. அதுவே ஒரு வலிமையான நாட்டிற்கு அடித்தளமாகின்றது என்பதே எங்களது பார்வை,” என்றார்.

நண்பகல் வரை ‘சூர்ய நமஸ்காரங்களில்’ ஈடுபட்ட பெண்கள், விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, மதிய உணவு விருந்து, ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் குழு விளையாட்டுகள் போன்ற நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டனர்.

சிவப்புச் சட்டை, வெள்ளைத் தொப்பி அணிந்துவந்த பங்கேற்பாளர்கள், இந்நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக ‘SG60’ என்ற வடிவத்தை அமைத்து ஒரு குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பங்கேற்பாளர்கள் ‘SG60’ என்ற வடிவத்தை அமைத்தனர்.
பங்கேற்பாளர்கள் ‘SG60’ என்ற வடிவத்தை அமைத்தனர். - படம்: வாங்கோ ஸ்டுடியோஸ்

இந்நிகழ்ச்சி முற்றிலும் அமைப்பின் தன்னார்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

முதலில், வாரத்தில் ஒருமுறை யோகா செய்தால்கூட அதன்பின் பல நாள்களுக்கு உடல் முழுதும் வலி ஏற்படும் என்று நினைவுகூர்ந்தார் குழுவின் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவரான இல்லத்தரசி திருவாட்டி உமா செந்தில், 49.

“ஆனால் இப்போது அன்றாடம் யோகா செய்கிறோம். இந்தப் பயணம் எங்கள் உடலை மட்டுமல்லாமல் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தையும் மாற்றியமைத்துள்ளது,” என்றார் அவர்.

இந்த அனுபவம் மேலும் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது என்று கூறிய அவர், “சிலவகை உடல்நலச் சிக்கல்களைக் குணப்படுத்த முடியும். ஒருவருக்கொருவர் மனத்தளவில் துணைநிற்க முடியும் என்பதற்கான நம்பிக்கையை இது உண்டாக்கியுள்ளது,” என்று கூறினார்.

உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்போல் ஒற்றுமையுடன் பழகுவதாகத் திருவாட்டி உமா சொன்னார்.

தமிழ்மொழி ஆதரவு ஆசிரியரான திருவாட்டி ஜீவராணி, 48, ஓராண்டுக்கு முன்பு கை நரம்புப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த அமைப்பில் சேர்ந்தார்.

“அப்போது, கைத்தொலைபேசியைக்கூட என்னால் கையில் தூக்க முடியவில்லை,” என்று அவர் கூறினார்.

மருத்துவர்கள் உடல் இயக்க சிகிச்சை, ஊசி சிகிச்சை போன்றவற்றைப் பரிந்துரைத்த நிலையில், இந்த அமைப்பில் சேர்ந்து மூன்று மாதங்கள் தொடர்ந்து யோகா செய்தபிறகு வலி முற்றிலும் மறைந்துவிட்டதாகத் திருவாட்டி ஜீவராணி குறிப்பிட்டார்.

“நாற்பது வயதுக்குப் பிறகு பெண்கள் பலர் தங்கள் உடல்நலனைப் புறக்கணிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் இங்கு, நாங்கள் எங்கள் உடல் வலிமையையும், மனவலிமையையும் மேம்படுத்துவதோடு தயக்கத்தைத் தகர்த்தெறியும் திறனைப் பெற்றுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்