பசுமை இலக்கியம், சுற்றுச்சூழல் குறித்த புதிய வாழ்வியல் கண்ணோட்டங்களை வழங்கியது, விருதுபெற்ற இயற்கைப் பாதுகாவலரும் எழுத்தாளருமான தியடோர் பாஸ்கரனோடு அண்மையில் நடந்த உரையாடல்.
நவம்பர் 8 முதல் 17ஆம் தேதி வரை ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ஸில் நடைபெறும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் நிகழ்ச்சிகளில் ஒன்றாக நவம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் இது நடந்தது.
தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருது (1997), இந்தியாவின் புகலரண் இயற்கை அறக்கட்டளையின் வாழ்நாள் சேவை விருது (2020) உள்ளிட்ட பல விருதுகளை வென்ற பெருமை திரு பாஸ்கரனைச் சேரும்.
அவரது எழுத்தும் கருத்துகளும் உலகளவில் ஏற்றுப்போற்றப்படும் நிலையில், ஏறக்குறைய 25 சிங்கப்பூர் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் நிகழ்ச்சி ஈர்த்திருந்தது.
இயற்கை சார்ந்த எழுத்துகள் எவ்வாறு சுற்றுப்புறப் பாதுகாப்பிற்குப் பங்களிக்கின்றன? பசுமை இலக்கியம் என்னென்ன வகைப்படும்? எனப் பல கேள்விகளுக்கும் அரை மணிநேர உரையில் விளக்கினார் திரு பாஸ்கரன். அதன்பின்பு, எழுத்தாளர் சிவானந்தம் நீலகண்டன் அவருடனான உரையாடலை வழிநடத்தினார்.
“திரு பாஸ்கரன் ஒவ்வொரு நூலையும் அறிமுகப்படுத்தும்போது நாம் என்னவெல்லாம் வாசிக்காமல் விட்டுவிட்டோம் என சிந்திக்கத் தோன்றும்,” என்ற பாராட்டோடு சிவானந்தம் தொடங்கினார்.
சுற்றுச்சூழலை முன்னிலைப்படுத்தாத நாடுகள் குறித்து வருத்தம்
பசுமை இலக்கியம் மக்களிடத்தில் மாற்றங்களை உண்டாக்கியுள்ளதா? என்ற கேள்விக்கு திரு பாஸ்கரன், “பசுமை இலக்கியத்தை, அவரவர் துறைக்கேற்ப வாசகர் உட்கொள்வதால், என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகக் கூறமுடியாது.
“தொழில் புரட்சி என்ற பெயரில் மனிதராகிய நாம் செய்த சுற்றுச்சூழல் சார்ந்த தவறுகளின் மொத்த தாக்கம்தான் காலநிலை மாற்றம். இதை ஒவ்வொரு தளத்திலும் தடுக்க முயற்சிசெய்ய வேண்டும். அதற்கு நாடுகள் முனைப்புடன் ஈடுபடவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“ஆனால் இன்றோ, காலநிலை மாற்றம் என்ற ஒன்றே இல்லை எனக் கூறும் டோனால்ட் டிரம்ப் உள்பட பல நாட்டுத் தலைவர்களும் அதைக் கவனிக்கவில்லை,” என வருந்தினார் திரு பாஸ்கரன்.
எனினும், இயற்கைப் பாதுகாப்பில் இந்தியா, குறிப்பாக சிக்கிம் மாநிலம் சிறந்து விளங்குவதை அவர் எடுத்துக் காட்டினார்.
“இங்கிலாந்து போன்ற நாடுகளில் மழைக் காடுகள் அருகிவந்துள்ளன. ஆனால், இந்தியாவில் இன்னும் தொன்மையான, முழு வளர்ச்சிகண்ட மழைக் காடுகள் உள்ளன,” என்றார் திரு பாஸ்கரன்.
“கிராமத்திலுள்ள சுதந்திரம் இல்லாமல் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது சரியா?”, “விலங்குகளைப் பற்றிய அழகான தமிழ்ப் பெயர்களை எவ்வாறு இளையர்களுக்கு எடுத்துச் செல்வது?” போன்ற வினாக்களுக்கும் அவர் பதிலளித்தார்.
‘நம்பிக்கை ஒளி பிறக்கிறது’
“உலக அளவில் அனைத்தும் அழிந்துவருகின்றன என்ற எண்ணமே பலரிடத்திலும் நிலவுகிறது. ஆனால், நம் முயற்சிகளினால் புலி, மான் போன்ற விலங்குகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என திரு பாஸ்கரன் கூறியபோது நம்பிக்கை ஒளி பிறந்தது,” என்றார் வாசகர் வினோத்.
திரு பாஸ்கரனை முன்னுதாரணமாகக் கொண்டு சுற்றுச்சூழல் சார்ந்த கவிதைகளை எழுதத் தொடங்கியவர் பா.சதீஸ் முத்து கோபால். அவரது தொகுப்புகளுக்குத் திரு பாஸ்கரன் அணிந்துரையும் வழங்கியுள்ளார்.
“பெங்களூரில் திரு பாஸ்கரனின் இல்லத்துக்குச் சென்றபோது அவருடன் பறவைகளை அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுபோன்ற அனுபவங்களால் நான் எழுத ஆரம்பித்தேன்,” என்றார் திரு சதீஸ்.
“இயற்கைக்குப் பன்னெடுங்காலமாக இருந்துவரும் தமிழ்ப் பெயர்களையே பயன்படுத்தவேண்டும்; ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கக்கூடாது என அவர் கூறியது சிறந்த கருத்து,” என்றார் ‘மக்கள் மனம்’ இதழ் ஆசிரியர் பிச்சினிக்காடு இளங்கோ.
“காடு, விலங்குகள் பற்றி திரு பாஸ்கரன் கூறியவை கவர்ச்சிகரமாக இருந்தன. இவ்விழாவில், அவர் முன்னிலையில் ஆய்வுக் கட்டுரைகள் படைக்க இளையர்களுக்கும் வாய்ப்பளிக்கிறோம்,” என்றார் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன்.
“இயற்கை சார்ந்த நிறைய பத்திரிகைகள் உலகளவில் வெளியாகின்றன. அதை வாசிப்பவர்களின் மனநிலை மாற்றங்கள் அவரவரின் செயல்பாடுகளில் வெளிப்படுகின்றன என திரு பாஸ்கரன் கூறினார்,” என்றார் விரைவில் ‘ததும்புதலின் பெருங்கணம்’ எனும் தொகுப்பை வெளியிடவுள்ள கவிஞர் மோகனப்ரியா.