தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உறக்கத்தில் ஆழ்த்தும் ‘அறிவாற்றல் மாற்ற அணுகுமுறை’

2 mins read
a0a97572-afd9-4d46-a2bc-7d39b8657829
இம்முறை இதமாக மனத்தை அமைதிப்படுத்தும் அணுகுமுறை இல்லையென்றாலும், சிந்தனை ஓட்டத்தை மடைமாற்றி உறங்க உதவுவதாகச் சொல்லப்படுகிறது. - மாதிரிப்படம்: பிக்சாபே

படுக்கையில் விழுந்ததும் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவோரைக் கொடுத்துவைத்தவர்கள் எனச் சொல்வதுண்டு.

அப்படிப் படுக்கையில் விழுந்தும் உறக்கம் கண்களைத் தழுவாமல் வெகுநேரம் சிரமப்படுவோர்க்காக ‘காக்னிட்டிவ் ‌‌ஷஃப்லிங்’ (Cognitive shuffling) எனும் அறிவாற்றல் மாற்ற முறை தற்போது புகழ்பெறத் தொடங்கியுள்ளது.

எப்போதும் பரபரப்பான இயக்கத்திலேயே இருக்கும் பலருக்கு படுத்தவுடன் உறங்குவதில் சிக்கல் இருக்கலாம். அன்றைய நாளில் நடந்த சம்பவங்களை அசைபோடுதல், மறுநாள் குறித்த சிந்தனை தொடங்கி எதிர்காலம் குறித்த அச்சம் வரையிலும் உறக்கத்தைத் தடைசெய்யும் சிந்தனைகள் பலரையும் ஆட்டிப் படைக்கின்றன. சிலரை ஒருவிதப் பதற்றம் ஆட்கொள்வதையும் காணலாம்.

அதனைத் தடுக்க, மெல்லிய இசை கேட்பது, புத்தகம் படிப்பது எனப் பலவகைத் தீர்வுகளை நாடுவது வழக்கம்.

மனித மூளையின் முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று ‘ஃபயரிங்’ (Firing) என்று மனநல நிபுணர் சமூகம் வரையறுக்கிறது. அதாவது, நினைவுகளை அணுகி மதிப்பீடு, திட்டமிடல், சிக்கல் தீர்வு ஆகியவற்றை மேற்கொள்ளும்போது மூளை தூண்டப்பட்டு தூக்கம் வராமல் தடுக்கிறது.

இந்தச் செயல்முறைகளை எதிர்த்து வினையாற்றும் அணுகுமுறையை வகுத்துள்ளார் கனடாவின் சைமன் ஃபிரேசர் பல்கலைக்கழகத்தின் சார்புநிலைப் பேராசிரியர் லூக் பியூடோயின்.

இந்த அணுகுமுறை விழிப்புநிலையிலிருந்து உறக்கத்தை நோக்கி நகர்த்துகிறது. ‘காக்னிட்டிவ் ‌‌ஷஃப்லிங்’ எனும் இந்த அறிவாற்றல் மாற்ற முறை எண்ணங்களைத் தடுமாற்றமடைய செய்து, மூளையின் நேரான, ஆழமான சிந்தனைகளில் குறுக்கிட்டு, செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது அனைவராலும் எளிதில் பின்பற்றத்தக்க முறையென்பதால் புகழ்பெற்று வருகிறது.

‘காக்னிட்டிவ் ‌‌ஷஃப்லிங்’

முதலில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ‘மனித வாழ்க்கை’.

முதலில் ‘ம’ எனும் எழுத்தில் தொடங்கும் பொருள்களின் பெயர்களைச் சிந்திக்க வேண்டும் - ‘மரம்’ - பின் மரத்தின் படத்தை மனத்தில் உருவகம் செய்ய வேண்டும். அடுத்து ‘மரகதம்’ - அதன் உருவத்தையும் மனத்தில் கொண்டுவர வேண்டும். தொடர்ந்து இதனைச் செய்து, அவ்வெழுத்தில் உள்ள சொற்கள் இனிச் சிந்திக்க இயலாது எனும் கட்டத்தில் இறுதி எழுத்தான ‘கை’யில் தொடங்கும் சொற்களைச் சிந்தித்து, உருவத்தை மனத்தில் நிறுத்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர மூளை சோர்வடைந்து உறக்கத்தில் ஆழ்த்தும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

முடிந்தால் அப்பொருளுடன் நாமும் இருப்பதுபோல மனத்தில் நினைக்கலாம். ‘மரம்’ என்றால், நாம் மரத்தடியில் நடப்பது போன்ற இயக்கக் காட்சிகளையும் நினைத்துக்கொள்ளலாம்.

மேலும், சொல்லை நினைக்கும்போது மூச்சை உள்ளிழுப்பதும் உருவத்தை மனத்தில் நினைக்கும்போது மூச்சை வெளிவிடுவதும் மனப்பதற்றத்தைக் குறைக்கும்.

இவ்வாறு செய்யும்போது, மூளை முக்கியச் சிந்தனைகளை நோக்கி நகரலாம். அவற்றைக் குறித்து கவலைப்படாமல், கவனமாக அச்சிந்தனையிலிருந்து விலகி, அறிவாற்றல் அணுகுமுறைகளை மேற்கொள்வது உறக்கப் பிரச்சினையிலிருந்து விடுபட உதவும் என்கிறார் திரு லூக்.

குறிப்புச் சொற்கள்