மற்ற பால் வகைகளைவிட பசும்பாலில் சத்து அதிகம்: ஆய்வு

2 mins read
a2b9a490-5f4b-43a2-b575-b762b8d3a6ec
கன்றுடன் நிற்கும் கறவை மாடு. - படம்: பிக்சாபே

பசும் பாலே சாலச்சிறந்தது. பசும்பாலுக்கு மாற்றாகக் கருதப்படும் சோயா பால், ஓட்ஸ் பால், பாதாம் பால் ஆகியவற்றில் உள்ள ஊட்டச்சத்து, பெரும்பாலும் பசும்பாலில் இருக்கும் அளவுக்கு இல்லை என்று ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

கால்சியம், வைட்டமின் சத்துகளைக் கொண்டுள்ள பசும்பால், புரதச்சத்து தரும் முக்கிய உணவாக உள்ளது.

தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் பாலுக்கும் பசும்பாலுக்கும் இடையிலான வேறுபாட்டை ஒப்பிடுவதற்காக, அமெரிக்காவில் கடந்த ஆண்டு விற்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட பசும்பால் மாற்றுப் பொருள்களை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.

அவற்றில் 12 விழுக்காட்டுப் பொருள்களில் மட்டுமே பசும்பாலுக்கு நிகரான அல்லது அதிகமான கால்சியம், வைட்டமின் டி, புரதம் ஆகிய ஊட்டச்சத்துகள் இருந்தன.

சோதிக்கப்பட்ட 223 பொருள்களில், 28 பொருள்களில்தான் பசும்பாலைவிட கூடுதல் சத்துகள் இருந்ததாக ஆய்வின் தகவல்கள் கூறுகின்றன.

மின்சோட்டா பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதார, ஊட்டச்சத்துப் பள்ளியைச் சேர்ந்த அபிகேய்ல் ஜான்சன், அமெரிக்க ஊட்டச்சத்துச் சங்கத்தின் வருடாந்திர சந்திப்பின்போது ஆய்வின் கண்டுபிடிப்புகள் குறித்து பகிர்ந்துகொண்டார்.

“பசும்பாலுக்கு பதிலாக மாற்றுப் பொருள்களை உட்கொள்ள விரும்புவோர் அவற்றில் கால்சியம், வைட்டமின் டி உள்ளதா எனப் பார்க்கவேண்டும். அத்துடன், தாவரவகை பால் பொருள்களைப் பருகுபவர்கள் கால்சியம், வைட்டமின் டி ஆகியவற்றைப் பெற வேறு உணவுகளையும் சேர்த்துக்கொள்வது நல்லது,” என்று இணைப் பேராசிரியர் ஜான்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“பசும்பாலுக்கு மாற்றுப் பொருளாக விற்கப்படும் தாவரப் பொருள்களால் செய்யப்படும் பால் பொருள்களில் பெரும்பாலானவை, பசும்பாலுக்கு இணையான ஊட்டச்சத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை வலியுறுத்துவது எங்களது ஆய்வு முடிவுகளின் நோக்கமாக உள்ளது,” என்றார் பேராசிரியர் ஜான்சன்.

உடற்பருமன், நீரிழிவு ஆகியவற்றுக்கு முன்தடுப்பு

இரண்டாம் வகை நீரிழிவுக்கு முக்கியக் காரணமாகத் திகழ்கிறது உடற்பருமன். இளம் வயதில் உடற்பருமனாகும் பிள்ளைகள் பலர், பெரியவர்களாகும்போது நீரிழிவுக்கு உள்ளாகின்றனர்.

ஆயினும், பால் பொருள்களை உட்கொள்ளும் இளம் வயதினருக்கு உடற்பருமனாகும் வாய்ப்பு சற்றுக் குறைவதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

பாலிலுள்ள புரதத்தால் வயிறு எளிதில் நிரம்புகிறது. குறுகிய காலத்திற்கு உடல் எடை குறைக்க முற்படும் பெரியவர்களுக்கு பால் உட்கொள்வது உதவக்கூடும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

தயிர் உட்கொள்வதால் நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. அதேபோல, சாப்பிட்ட பிறகு ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை மோர் குறைப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்