வன்போலி நம்மை நெருங்கிவிட்டது; பாதுகாப்பைக் கடைப்பிடிப்போம்

2 mins read
687c24b3-b234-4cd1-9de1-5b4a73e0cc52
ஐஃபோன் மூலம் காணொளி எடுப்பது போன்ற பாவனைப் படம். - படம்: பிக்சாபே

பிரதமர் லாரன்ஸ் வோங், முதலீட்டு மோசடியை ஆதரிக்கும் வண்ணம் வன்போலி (டீப்ஃபேக்) செய்யப்பட்ட காணொளி ஒன்று கடந்தாண்டு சமூக ஊடகத்தில் பரவியது.

மறைந்த அதிபர் சுகார்த்தோ, இவ்வாண்டு இந்தோனீசியத் தேர்தலின்போது பேசுவதுபோல் தத்ரூபமாக தயாரிக்கப்பட்ட காணொளி, வெறும் ஐந்து நாள்களில் 4.2 மில்லியன் பார்வைகளைப் பெற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்படும் இணைய ஆள்மாற்றாட்ட மோசடி மேலோங்கி வரும் சூழலில், முக்கியப் பிரமுகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இதற்கு ஆளாகும் சாத்தியம் வெகுவாக அதிகரித்துள்ளது. 

நமக்குத் தெரிந்தவர்களைப்போல நடித்து மோசடி செய்வதற்கு வன்போலி கைகொடுக்கிறது.

தம் உயரதிகாரி காணொளியில் தோன்றி, மில்லியன் கணக்கில் பணப் பரிவர்த்தனை செய்யக் கூறியதைத் தொடர்ந்து, ஹாங்காங்கில் உள்ள ஓர் ஊழியர் மில்லியன் கணக்கில் பணமிழந்தார்.

மோசடிகள் அதிகரித்துள்ள இன்றைய மின்னிலக்கச் சூழலில் கேட்பவற்றை மட்டுமின்றி காண்பவற்றையும் உடனே நம்பாதிருப்பது அவசியம். 

தவறான காணொளிகளிலும் புகைப்படங்களிலும், குறிப்பாக பெண்களை வன்போலி செய்யும் போக்கு கவலைக்குரியது.

ஒவ்வோர் ஊடக, இணையப் பயனரின் கைகளிலும் இப்போக்கிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வழிகள் உள்ளன.

தனிப்பட்ட சுய படங்களைப் பகிரும் சமூக ஊடகக் கணக்குகளைத் தனிப்பட்டதாக்குவதும் நம்பகத்தன்மை வாய்ந்தோர் மட்டுமே இக்கணக்குகளைப் பின்தொடர்வதை உறுதிப்படுத்துவதும் பரிந்துரைக்கப்படுகிறது.

குறிப்பிட்ட செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது, அவை படங்கள், காணொளிகளுக்கான அனுமதி கோரலாம். எல்லாவற்றுக்கும் அனுமதி வழங்காமல், தேவையானவற்றுக்கு மட்டும் அனுமதி தருவது பாதுகாப்பளிக்கும். 

ஊடகக் கணக்குகளை அதிகபட்ச அளவுக்குத் தனிமைப்படுத்திக்கொண்டு பிறர் ஊடுருவ முடியாதபடி பாதுகாப்பதும் முக்கியம். இதுகருதி பரிந்துரைக்கப்படும் ஒரு வழிமுறை, ஈரடுக்கு மறைச்சொல் முறையை (2FA) பயன்படுத்துவதே. 

ஊடகத் தளங்களிலோ இணையத்திலோ வன்போலி செய்யப்பட்டவற்றைக் கண்டால் புகாரளிப்பதும் சமூக ஊடக, இணையப் பயனர்களின் பங்காகும். இவை வன்போலி கலாசாரத்தை முடக்குவதற்கு உதவும். 

மிக ஆழமாகவும் அகலமாகவும் பரந்துள்ள மின்னியல் உலகில் பயனுள்ள பல தகவல்களும் கருவிகளும் இருக்கவே செய்கின்றன.

தீய தாக்கங்கள் எம்மூலையிலும் ஒளிந்திருக்கலாம் என்பதை எப்போதும் நினைவில் கொண்டு, எளிதில் நம்பாமல் இருப்பது நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான முதல் படி.

குறிப்புச் சொற்கள்