தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
ஆண்களைவிடப் பெண்களுக்கு ‘டிமென்ஷியா’ எனும் மறதிநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் காட்டுகின்றன.

மகளிரை அதிகம் பாதிக்கும் மறதிநோய்

3 mins read
ஒருவரின் அன்றாட நடவடிக்கைகளில் நினைவாற்றல், சிந்தனை, சமூகத் திறன்களைப் பெரிதும் பாதிக்கும் அளவிலான அறிகுறிகளுக்கு மறதிநோய் (‘டிமென்ஷியா’) என்று பெயர்.
4c7f98e7-a118-464f-bc56-e3e9d84b65e1
மனநலக் கழகத்தின் சிங்கப்பூர் முதியோர் நல்வாழ்வு (WiSE) ஆய்வின் மூலம் ‘டிமென்ஷியா’ எனும் மறதிநோய், 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோரைப் பாதிப்பதாகத் தெரியவந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மனநலக் கழகத்தின் சிங்கப்பூர் முதியோர் நல்வாழ்வு (WiSE) ஆய்வின் மூலம் ‘டிமென்ஷியா’ எனும் மறதிநோய், 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோரைப் பாதிப்பதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்தியர், சீனர், மலாய் இனத்தவர்களை அது வெவ்வேறு விதமாகப் பாதிக்கிறது. 

சீனர்களைவிட இந்தியர்களும் மலாய்க்காரர்களும் மறதிநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று உள்ளூர் ஆய்வுகள் காட்டுகின்றன.

2003ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் தேசிய மனநலச் சுகாதார ஆய்வின் மக்கள்தொகை அடிப்படையிலான தரவுகளைப் பயன்படுத்தி 2010ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியர்கள் மத்தியில் மறதிநோய்க்கான ஒட்டுமொத்த பாதிப்பு விகிதம் 8.8% என்று கண்டறியப்பட்டது.

மலாய்காரர்களின் ஒட்டுமொத்த பாதிப்பு விகிதம் 9.4% என்றும், சீனர்களுக்கு அது 4.2% என்றும் தெரிவிக்கப்பட்டது. 

மறதிநோயின் ஆரம்ப அறிகுறிகள்

குறுகியகால நினைவாற்றல் இழப்பு பெரும்பாலும் மறதிநோயின் ஆரம்ப அறிகுறியாகும்.

அதோடு, எண்ணங்களை வெளிப்படுத்த சரியான சொற்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் , திறன்பேசி அல்லது இயந்திரங்களை இயக்குவது போன்ற புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் சிரமம், அன்றாடப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம், அறிமுகமற்ற நடைபாதை அல்லது வழிகளில் சுதந்திரமாகச் செல்வதில் சிக்கல் போன்றவற்றையும் கூறலாம்.

மறதிநோயின் ஆரம்ப அறிகுறிகள் பொதுவாக அறிவாற்றல் திறன்களில் ஏற்படும் மாற்றங்களை உள்ளடக்கியது. நோய் மோசமாகும்போது கூடுதல் அறிகுறிகள் தோன்றலாம். 

மறதிநோயின் ஒரு வகை

மறதிநோயின் பொதுவான ஒரு வகை ‘அல்சைமர்’ எனப்படும் நினைவாற்றல் இழப்பு நோய். முதுமையின் போது ஏற்படும் இந்த நோய் பொதுவாகப் பெண்களை அதிகம் பாதிக்கக்கூடிய வகையாகும். 

அல்சைமர் நோயால் மூளையில் அசாதாரண புரதங்களின் குவிப்பு ஏற்பட்டு மூளை அணுக்கள் மடிவதற்கு வழிவகுக்கிறது. பின்னர், மூளையின் செயல்பாடு படிப்படியாகக் குறையும்.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரிய அளவில் நினைவாற்றல் இழப்பு ஏற்படலாம். இதன் விளைவாக அவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்குக்கூட மற்றவர்களுடைய உதவி தேவைப்படுகிறது.

நீண்ட ஆயுள், மாதவிடாய் நிறுத்தம் 

பொதுவாகப் பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால், அவர்களுக்கு மறதிநோய் ஏற்படும் ஆபத்து அதிகம். மேலும், மாதவிடாய்க் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் அளவு குறையும். இந்த மாற்றம் அல்சைமர் நோய்க்கு வழிவகுக்கிறது. 

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இதயநோய்க்கான ஆபத்தும் அதிகரிக்கிறது. இது ‘டிமென்ஷியா’ அபாயத்தையும் அதிகரிக்கும்.

இதயநோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்

2013ஆம் ஆண்டில் ‘அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், மாரடைப்பிலிருந்து தப்பிய பெண்களின் நினைவாற்றல், அறிவாற்றல் குறையும் போக்கு இருமடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டது.

இதயநோய் தவிர, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் மறதிநோய் ஏற்படும் அபாயம் அதிகம். இது மூளை உட்பட உடல் முழுவதும் உள்ள இரத்த நாளங்களைச் சேதப்படுத்தும்.

தூக்கமின்மை, மோசமான மனநிலை 

அன்றாடம் பல பொறுப்புகளைக் கையாள்வதால், பெண்கள் பலரும் குறுகிய, தரமில்லாத தூக்கத்தை அனுபவிக்கின்றனர். ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமான மனச் சோர்வு, மனப்பதற்றம் ஏற்படுகிறது. இதனால் நாளடைவில், அவர்களுடைய அறிவாற்றல் வீழ்ச்சி காண்கிறது. 

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மறதிநோய் அபாயத்தைக் குறைக்க உதவும்

மறதிநோய்த் தடுப்புக்கு உறுதிகூற இயலாவிட்டாலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது அந்நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கக்கூடும். 

பழங்கள், காய்கறிகள், மிதமான அளவு மீன், இறைச்சி வகைகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சத்தான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிக்கலாம்.  

அதிக சர்க்கரை நிறைந்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்தலாம்.

தொடர்ந்து சிறுநடை, நீச்சல், ‘ஏரோபிக்ஸ்’ போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வது சிறந்தது. 

போதுமான ஓய்வும் தூக்கமும் இதயநோய், மறதிநோய் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்க உதவும்.  

முக்கியமாக, வழக்கமான இடைவெளியில் உடல்நலப் பரிசோதனைகளுக்குச் செல்வதால் மறதிநோயை விரைவில் கண்டறிந்து தேவையான உதவியை நாடலாம். 

குறிப்புச் சொற்கள்