உலகெங்கிலும் மில்லியன்கணக்கானோரைப் பாதிக்கும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி ‘உலக நீரிழிவு நாளாக’ கடைப்பிடிக்கப்படுகிறது.
நீரிழிவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. அங்கு அதனால் 148 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது; 89.8 மில்லியன் இந்தியர்கள் மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
38.5 மில்லியன் பேருடன் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும், 34.5 மில்லியன் பேருடன் பாகிஸ்தான் நான்காம் இடத்திலும், 20.4 மில்லியன் பேருடன் இந்தோனீசியா ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வதால் மட்டுமே நீரிழிவு ஏற்படுகிறது என்று இன்னமும் பலர் நம்புகின்றனர்.
இனிப்பு வகைகளைத் தவிர்த்துவிட்டால் நோய் அபாயம் நீங்கிவிடும் என்று அவர்கள் கருதுகின்றனர். ஆனால், உண்மை நிலை மிகவும் சிக்கலானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, நோயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்று ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ கட்டுரை விவரிக்கிறது.
நீரிழிவைக் கட்டுப்படுத்தத் தவறினால் அது காலப்போக்கில் இதயம், சிறுநீரகங்கள், கண்கள், நரம்புகளைப் படிப்படியாகப் பாதிக்கும்.
அமைதியான தொடக்கநிலை
வளர்சிதை மாற்றம் என்பது நமது உடல் உணவைச் செரிக்கும், ஆற்றலைப் பயன்படுத்தும் முறையில் ஏற்படும் மாற்றங்களைக் குறிப்பதாகச் சொல்கிறார் ஹைதராபாத் ஏஜிஐ மருத்துவமனையின் ஆலோசகரும், நாளமில்லாச் சுரப்பியியல், நீரிழிவு சிகிச்சை வல்லுநருமான டாக்டர் தீபக் திரிவேதி.
தொடக்கக்கால மாற்றங்களில் ஒன்று இன்சுலின் எதிர்ப்புத்தன்மை. அந்த நிலையில், உடலானது இன்சுலினை திறம்பட ஏற்பதில்லை.
“நீரிழிவு என்பது வெறும் உயர் ரத்த சர்க்கரை அளவுதான் என்ற பொதுவான கருத்துக்கு மாறாக, சர்க்கரை அளவு இயல்புக்கு மாறான நிலையை எட்டுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே வளர்சிதை மாற்றக் குறைபாடு தொடங்கலாம்,” என்று ஜூபிலி ஹில்ஸ் அப்பல்லோ மருத்துவமனைகளின் ஆலோசகரும் நாளமில்லாச் சுரப்பியியல் வல்லுநருமான டாக்டர் ரவி சங்கர் எருகுலபதி.
பெரும்பாலான தொடக்கக்கால மாற்றங்கள் வெளிப்படையான அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை. இடுப்புச் சுற்றளவு அதிகரித்தல், அடிவயிற்றில் எடை கூடுதல், கழுத்து அல்லது அக்குள் பகுதிகளில் தோல் கருமையடைதல் ஆகியவற்றைச் சாத்தியமான எச்சரிக்கை அறிகுறிகளாக டாக்டர் தீபக் அடையாளம் காட்டுகிறார்.
“ஒருவருக்கு நீரிழிவுக்கு முந்தைய நிலை இருந்தபோதிலும், அவர் முற்றிலும் ஆரோக்கியமாக உணரக்கூடும். இதனால்தான் வழக்கமான பரிசோதனை முக்கியமானது,” என்று அவர் கூறுகிறார்.
இரண்டாம் வகை நீரிழிவு நோய் படிப்படியாக உருவாகிறது. தொடக்கத்தில் இன்சுலின் எதிர்ப்புத்தன்மையைச் சமாளிக்க உடல் அதிக இன்சுலினை உற்பத்தி செய்கிறது.
யாருக்கு ஆபத்து அதிகம்?
முதற்கட்டப் பரிசோதனைக் கருவிகளாக வெறும் வயிற்றில் ரத்த குளுக்கோஸ் மற்றும் ‘எச்பிஏ1சி’ சோதனைகளையும், சிலர்க்கு வாய்வழி குளுக்கோஸ் ஏற்புத்தன்மைச் சோதனையையும் பரிந்துரைக்கிறார். ரத்தக் கொழுப்பு, ரத்த அழுத்தம், இடுப்புச் சுற்றளவு ஆகியவற்றை அளவிடுவது வளர்சிதை மாற்ற நலத்தை மதிப்பிட உதவும்.
35 வயதுக்கு மேற்பட்டவர்கள் அச்சோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும் என்றும் அதிக ஆபத்துள்ளோர்க்கு ஆண்டுதோறும் பரிசோதனை தேவைப்படலாம் என்றும் டாக்டர் ரவி சங்கர் கூறினார்.
குடும்ப வரலாறு, அடிவயிற்றுப் பருமன், உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை, உயர் ரத்த அழுத்தம், கொழுப்புக் கல்லீரல், சினைப்பை நீர்க்கட்டிகள் ஆகியவை ஆபத்துக் காரணிகளில் அடங்கும்.
இந்தியர்கள் மேலும் ஒரு கவலையை எதிர்நோக்குகின்றனர்.
“இந்தியர்களுக்கு இளவயதிலேயே, குறைந்த உடல் எடையுடன் இருந்தபோதும் நீரிழிவு ஏற்படலாம். வயது ஆபத்தை அதிகரிக்கிறது. ஆனால், நீரிழிவால் பாதிக்கப்பட்ட இளவயதினரை நாங்கள் அதிக அளவில் காண்கிறோம்,” என்றார் டாக்டர் தீபக்.
தடுப்பது சாத்தியமே!
இரண்டாம் வகை நீரிழிவு நோயைத் தடுக்க அல்லது தாமதப்படுத்துவதற்கான மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாக வாழ்க்கைமுறை மாற்றங்கள் திகழ்கின்றன.
“மரபணுக்கள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், அந்தப் பரம்பரை பாதிப்பு நீரிழிவாக மாறுமா என்பதை வாழ்க்கை முறை தீர்மானிக்கிறது,” என்று டாக்டர் ரவி சங்கர் சுட்டிக்காட்டுகிறார்.
வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சமச்சீர் உணவுடன், உடல் எடையில் 5 முதல் 7 விழுக்காடு வரை குறைப்பதும் நீரிழிவு ஆபத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன.
சிறிய, தொடர்ச்சியான மாற்றங்கள்கூட ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்கிறார் டாக்டர் தீபக்.
வேகமான நடைப்பயிற்சி அல்லது பிற மிதமான உடற்பயிற்சிகளை டாக்டர் ரவி சங்கர் பரிந்துரைக்கிறார். அதே நேரத்தில், மாவுச்சத்து, சர்க்கரை பானங்களைக் குறைத்து, அதிக காய்கறிகள், பருப்பு வகைகள், புரதச்சத்து நிறைந்த சமச்சீரான, வீட்டில் சமைத்த உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு டாக்டர் தீபக் அறிவுறுத்துகிறார்.
நீண்ட நேரம் அமர்ந்திருப்பதை சிறு நடைப்பயிற்சிகள்மூலம் பிரிப்பதும் உதவும். அதனை வழக்கப்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியம் என்கிறார் டாக்டர் தீபக்.
நீரிழிவு பற்றிய தவறான கருத்துகளும் தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தடையாக இருக்கலாம். அதிகப்படியான சர்க்கரை பயன்பாட்டால் மட்டுமே இது ஏற்படுகிறது அல்லது அதிக எடை கொண்டவர்களை மட்டுமே பாதிக்கிறது என்று பலரும் நம்புகின்றனர்.
“ஒரே ஓர் உணவைத் தவிர்ப்பதைவிட, அளவான உணவு, சமச்சீர் ஊட்டச்சத்து, வழக்கமான உடற்பயிற்சி ஆகியவை மிகவும் முக்கியமானவை,” என்று டாக்டர் தீபக் தெளிவுபடுத்துகிறார்.
