ஒருவரின் தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதில் சரியான ஷாம்பு, பராமரிப்புப் பொருள்களின் பயன்பாடு மட்டுமல்லாமல் உண்ணும் உணவுக்கும் மிகப் பெரிய பங்கு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
அடர்த்தியான தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளையும் அவற்றை எவ்வாறு பெறலாம் என்பதையும் ஆராய்ந்தது தமிழ் முரசு.
சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அழகுப் பராமரிப்பு சார்ந்த கணக்கெடுப்பின்படி கிட்டத்தட்ட 44 விழுக்காட்டினருக்கு முடி உதிர்தல் முக்கியக் கவலை என்று தெரியவந்தது.
84 விழுக்காட்டினருக்கு முடி உதிர்தல் பிரச்சினை தொடர்வதாகவும் 60 விழுக்காட்டினர் அதற்கான தீர்வுகளைக் கடைப்பிடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒட்டுமொத்த தலைமுடி ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார் சிங்கப்பூர் ஊட்டச்சத்து, உணவுமுறைச் சங்கத் தலைவர் கல்பனா பாஸ்கரன்.
புரதம், இரும்பு, துத்தநாகம் (zinc), பயோட்டின், வைட்டமின்கள் ஏ, டி, சி, ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு வகைகள் தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிக உகந்தவை என்றும் அவர் தெரிவித்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாகத் தலைமுடிக்கு நீர்ச்சத்து மிகவும் முக்கியம் என்றும் நீர்ச்சத்து குறைந்தால் முடி வறண்டு, உடையக் கூடும் என்றும் கூறினார் கல்பனா.
“மயிர்க்கால் (hair follicle) ஏறத்தாழ 25 முதல் 30 விழுக்காடு வரை தண்ணீரால் ஆனது. போதிய தண்ணீர் குடிப்பதால் தலைமுடி வேகமாக வளராது என்றாலும் உச்சந்தலை, மயிர்க்கால், தலைமுடி வேரின் ஆரோக்கியத்திற்கு அது அவசியம்,” என்றார்.
வழக்கமாக மருந்து மற்றும் முடி சிகிச்சைகள் மூலம் முடி உதிர்தல், வறட்சியைக் குணப்படுத்த முடியும் என்றாலும் ஊட்டச்சத்து நிரம்பிய உணவை உண்டால் நீண்ட காலத்துக்கு நன்மை விளையும்.
புரதச் சத்து தரும் முட்டை, மீன், கோழி, தவ்வு (tofu) போன்றவற்றை உண்பதால் முடி வளர்ச்சி மேம்படுகிறது.
இரும்புச் சத்து நிரம்பிய இறைச்சி (red meat), கீரை, தானிய வகைகள் உண்பதால் முடியின் வேருக்குத் தேவையான ஆக்ஸிஜன் விநியோகம் அதிகரிக்கிறது.
துத்தநாகச் சத்துக்குச் சிப்பிகள், பூசணி விதைகள், கொண்டைக்கடலை உண்ணலாம். அவை முடி வேரைச் சீர்செய்து அதன் எண்ணெய்ச் சுரப்பிகளைப் பராமரிக்கிறது.
பயோட்டின் சத்துள்ள முட்டை, கடலை வகைகள், வெண்ணெய்ப்பழம் (Avocado) ஆகியவற்றை உண்பதால் முடியும் நகங்களும் வலுவடைகின்றன.
ஒமேகா சத்து கொண்ட சால்மன் மீன், சியா விதைகள், வாதுமைக் கொட்டை (Walnut) போன்ற உணவுகள் முடி வறட்சியைக் குறைக்க உதவும்.
வைட்டமின் சத்துகளுக்கு மீன், காளான்கள், செறிவூட்டப்பட்ட பால் பொருள்கள், சிட்ரஸ் பழங்கள், குடைமிளகாய், சூரியகாந்தி விதைகள், பாதாம், கீரை போன்ற உணவுகளை உண்ணலாம். இவை முடி சேதமாகாமல் பாதுகாக்க உதவுகின்றன.
ஆரோக்கியமான கூந்தலுக்கு உணவு மிக முக்கியம். அதே நேரத்தில் ஆரோக்கியமான கூந்தலைப் பெற உதவும், குறிப்பாக ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு முடி வளர்ச்சிக்கு உதவும் மாத்திரைகள் பிரபலமடைந்துள்ளன.
எந்த ஒரு துணைமருந்தையும் தொடங்குவதற்குமுன் சுகாதார வல்லுநருடன் கலந்தாலோசிப்பது நல்லது.
“முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் ஆரோக்கியமான உணவுமுறையும் வாழ்க்கை முறையும் முன்னுரிமைகளாக இருக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார் கல்பனா.
அதுமட்டுமன்றி அதிக மனவுளைச்சல், குறைவான தூக்கமும் குறைவான உடற்பயிற்சியும் தலைமுடி ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்றார் அவர்.
கலாசாரத்தில் வேரூன்றியிருக்கும் தலைமுடி ஆரோக்கிய உதவிக்குறிப்புகள் பொதுவாகச் சிறந்தவை என்றார் கல்பனா.
“இந்திய உணவுமுறையில் சேர்க்கப்படும் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய், நெல்லிக்காய் ஆகியவற்றின் பயன்பாடு முடி வளர்ச்சிக்கு மிக உகந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.