சிங்கப்பூர்த் தமிழர்களின் இருநூறு ஆண்டுகால வரலாற்றை உணர்த்தும் சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் ஜனவரி 11ஆம் தேதி தமிழ்நாட்டில் அறிமுகம் கண்டது.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தலைமையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலைக்களஞ்சியத்தின் ஆசிரியரும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகியுமான திரு அருண் மகிழ்நனும் தொகுப்பின் துணை ஆசிரியரும் தேசிய நூலக வாரியத் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவின் தலைவருமான திரு அழகிய பாண்டியனும் விளக்கவுரையாற்றினர்.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன் வரவேற்புரையாற்றினார்.
‘இருநூறு ஆண்டுகளாகச் சிங்கப்பூர்த் தமிழர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?’ என்ற நகைச்சுவை கலந்த தலைப்பில் தன் உரையைத் தொடங்கினார் திரு அருண் மகிழ்நன்.
கலைக்களஞ்சியத்தைச் சிங்கப்பூர் தமிழர்களே படிக்கவேண்டும் என்பது நோக்கமன்று என்பதால் தமிழ்நாடு, மலேசியா என சிங்கப்பூருக்கு அப்பாலும் தொகுப்பைப் பற்றிப் பேசிவருவதாகத் திரு அருண் கூறினார். “சிங்கப்பூர் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் யாவர்க்கும் இத்தொகுப்பு ஏற்றது,” என்றார் அவர்.
‘ஆய்வு அடிப்படையில் சிங்கப்பூர் பற்றிய வரலாறுகள் மிகவும் குறைவு; அதுவும் முழுமையான வரலாறு ஏதும் இல்லையே’ என்ற ஏக்கம் திரு அருண் மகிழ்நனுக்கும் சக ஆர்வலர்களுக்கும் நெடுங்காலம் இருந்ததுண்டு.
2006ல் ஆங்கிலத்தில் வெளியான ‘சிங்கப்பூர் கலைக்களஞ்சியம்’ (Singapore: The Encyclopedia), 2019ல் வெளியான ‘ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்’ ஆகிய தொகுப்புகளின் உருவாக்கத்தில் கிடைத்த அனுபவங்கள்மூலம் சிங்கப்பூர்த் தமிழர்க்கெனக் கலைக்களஞ்சியம் உருவாக்கும் முயற்சியை முன்னெடுக்கும் எண்ணம் தமக்குத் தோன்றியதாகத் திரு அருண் கூறினார்.
இது சிங்கப்பூர்த் தமிழர் வரலாற்றுக்கான அறிமுகமே என்றும் இது தொடர்ந்து விரிவடைந்துவரும் என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“தேசிய நூலக வாரியம் இருக்கும்வரை கலைக்களஞ்சியம் இருப்பது உறுதி,” என்றார் அவர்.
“சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் என்பது இதுவரை யாரும் செய்யாத கன்னிமுயற்சி. நாங்கள் துணிந்து இதில் இறங்கியுள்ளோம்,” என்ற திரு அருண், இக்கலைக்களஞ்சியம் மின்னிலக்க வடிவில் இருப்பதால் பிழைகள் இருப்பின் உடனடியாகத் திருத்திக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார். எனினும், “ஆங்கிலத்தில் படித்த சிங்கப்பூரர்கள் இதுவரை பெரிய அளவில் பிழைகளைக் கண்டுபிடிக்கவில்லை,” என்று அவர் சுட்டினார்.
கலைக்களஞ்சியத்தின் துணை ஆசிரியராகச் செயலாற்றிய திரு சிவானந்தம் நீலகண்டன், 2026 ஜனவரிமுதல் முதன்மை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
“சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்க மேற்கொண்ட முயற்சியே இந்த கலைக்களஞ்சியம். 2015ல் இன்னொரு பெரிய முயற்சியைச் சிங்கப்பூரின் 50ஆம் ஆண்டு நிறைவுக்காகச் செய்தோம். சிங்கப்பூரின் 50 ஆண்டுத் தமிழ் இலக்கியத்தை நிரந்தரப்படுத்த கிட்டத்தட்ட 350 சிங்கப்பூர் தமிழ் இலக்கிய நூல்களை மின்மயமாக்கி இப்போது தேசிய நூலக வாரியத்தில் இடம்பெறச் செய்துள்ளோம்,” என்று திரு அழகிய பாண்டியன் தெரிவித்தார்.
“அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர்த் தமிழ் இசை, நடனம், நாடகம் என்ற மூன்று மின்தொகுப்புகளையும் கடந்த பத்து ஆண்டுகளில் வெளியிட்டோம். அதன்பிறகு, மூன்று ஆண்டுகால முயற்சியில் இந்த கலைக்களஞ்சியம் உருவானது. இதன் பின்னணியில் 300 தொண்டூழியர்களின் உழைப்பு உள்ளது. உழைத்தவர்கள் பலர் தமிழர் அல்லாதவர்கள் என்பது மனநிறைவளிக்கிறது,” என்றார் அவர்.
“தேசிய நூலகத்திலுள்ள பழைய எழுத்தாளர்களின் ஒலிப்பதிவுகளையும் இன்ஃபோபீடியாவில் சிங்கப்பூர் பற்றி உள்ள சிறு குறிப்புகளையும் இந்த கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம்,” என்று எழுத்தாளர் மாலன் பரிந்துரைத்தார்.
“இது வரவேற்கத்தக்க முயற்சி. இதை மின்னூலாக வெளியிட்டது நல்ல திட்டம். தொகுப்புக் குழுவில் எனக்குத் தொடக்கத்திலிருந்தே நம்பிக்கை இருந்தது. அவர்கள் எண்ணித் துணிபவர்கள்,” என்றார் ‘முரசு அஞ்சல்’ நிறுவனர் முத்து நெடுமாறன்.
சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தை https://www.nlb.gov.sg/main/site/EST-ENG இணையத்தளத்தில் காணலாம்.

