மூளையையும் நினைவாற்றலையும் மேம்படுத்த உதவும் உணவுமுறைகள்

மூளையையும் நினைவாற்றலையும் மேம்படுத்த உதவும் உணவுமுறைகள்

படம்: பிக்சாபே

26 Oct 2026 - 6:01 am

4 mins read

சாவிக்கொத்தை வைத்த இடத்தை மறப்பது, தெரிந்த ஒருவரின் பெயரை நினைவுகூரச் சிரமப்படுவது அல்லது ஓர் அறைக்குள் நுழைந்துவிட்டு எதற்காக வந்தோம் என்பதை மறந்து தவிப்பது போன்றவை எவருக்கும் ஏற்படக்கூடிய இயல்பான விஷயங்களே.

இருப்பினும், ஒரே இரவில் நினைவாற்றலை அதிகரிக்க எந்தவொரு தனிப்பட்ட உணவாலும் முடியாது என்றாலும் நாம் உட்கொள்ளும் ஒட்டுமொத்த உணவுமுறை மூளையின் ஆரோக்கியத்திலும் அதன் சிந்தனைச் செயல்பாட்டிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என ஆய்வுகள் தொடர்ந்து தெரிவிக்கின்றன.

காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள், பருப்பு வகைகள், கடலைகள், மீன் மற்றும் நிறைவுறாக் கொழுப்பு நிறைந்த உணவுமுறைகள் சிறந்த மூளை ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை என்று அமெரிக்காவின் தேசிய முதியோர் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

அதேவேளையில், குறிப்பிட்ட ஒரு தனி உணவு மட்டுமே நினைவாற்றல் இழப்பையோ அல்லது நினைவிழப்பு நோயையோ முற்றிலும் தடுத்துவிடும் என்பதற்குத் தீர்க்கமான சான்றுகள் இல்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, ஏதேனும் ஒரு ‘அதிசய உணவைத்’ தேடுவதற்குப் பதிலாக, ஊட்டச்சத்துகள் நிறைந்த பல்வேறு உணவுகளை அன்றாடம் ஒருங்கிணைத்து உண்பதே சிறந்த அணுகுமுறையாகும்.

பசலைக்கீரை போன்ற இலைக்காய்கறிகளுடன் முட்டையைச் சேர்த்து உண்பது மூளைச் செயல்பாட்டுக்குத் தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை ஒரே வேளையில் உடலுக்கு வழங்குகிறது.

பசலைக்கீரையானது ஃபோலேட், வைட்டமின் கே, காரோட்டினாய்டுகள் மற்றும் தாவரக் கூட்டுப் பொருள்களை வழங்குகிறது. அதேவேளையில் முட்டையானது நரம்பு மண்டலத் தகவல் பரிமாற்றத்துக்கும் உயிரணு சவ்வுகளின் பராமரிப்புக்கும் தேவையான ‘கோலைன்’ சத்தைக் கொண்டுள்ளது.

இலைக்காய்கறிகளைத் தவறாமல் உட்கொள்வது வயது தொடர்பான மூளைச் செயல்பாட்டுக் குறைபாட்டை மெதுவாக்குகிறது என்று ‘தேசிய மருத்துவ நூலகத்தில்’ வெளியான ஆய்வு குறிப்பிடுகிறது. முட்டையை வறுத்தோ, ஓம்லெட்டாகவோ அல்லது அவித்த முட்டையை இலைக்காய்கறிச் சாலட்டுடன் சேர்த்தோ உட்கொள்ளலாம்.

ஒரு கைப்பிடி அளவிலான பெர்ரி பழங்களுடன் வால்நட் அல்லது பாதாம் போன்ற கடலை வகைகளைச் சேர்த்து உண்பது மூளைக்கு ஏற்ற எளிய சிற்றுண்டியாக அமைகிறது. பெர்ரி பழங்களில் ஃபிளவனாய்டுகள் போன்ற தாவரக் கூட்டுப் பொருள்கள் நிறைந்துள்ளன. பெர்ரி பழங்களில் உள்ள ‘அந்தோசயனின்’, நினைவாற்றல் உட்பட மூளையின் அறிவாற்றல் செயல்திறனில் நன்மையளிக்கும் விளைவுகளைக் கொண்டிருப்பதாக ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளது.

வால்நட் போன்ற கடலை வகைகள் நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களை வழங்கினாலும், மூளையின் சிந்தனைத் திறனில் அவை நேரடியாக ஏற்படுத்தும் தாக்கம் குறித்த சான்றுகள் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டவையாக உள்ளன. இருப்பினும், இந்த உணவுச் சேர்க்கை ‘மைண்ட்’ உணவுமுறைப் பரிந்துரையுடன் பொருந்திப்போகிறது.

சால்மன், சார்டின், மெக்கரல் மற்றும் டியூனா போன்ற கொழுப்புச் சத்துமிக்க மீன்கள் நீண்ட சங்கிலி ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களான இபிஏ மற்றும் டிஎச்ஏ ஆகியவற்றை வழங்குகின்றன.

இதனுடன் காய்கறிகளைச் சேர்க்கும்போது நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாவரக் கூட்டுப் பொருள்கள் கிடைக்கின்றன. ஆலிவ் எண்ணெய் நிறைவுறாக் கொழுப்பை அளிக்கிறது. இந்த உணவுச் சேர்க்கையானது இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்துக்காகத் தொடர்ந்து ஆராயப்படும் ‘மெடிட்டரேனியன்’ பாணி உணவுமுறையை ஒத்துள்ளது.

வழக்கமாக மீன் உட்கொள்வது உயர் மூளைச் செயல்பாட்டுக்கும் மெதுவான மூளைத்திறன் சரிவுக்கும் வழிவகுப்பதாகத் தேசிய முதியோர் நிறுவனம் குறிப்பிடுகிறது.

கைக்குத்தல் அரிசியுடன் ‘டால்’ எனப்படும் பருப்புக் குழம்பு அல்லது முழுதானிய ரொட்டியுடன் பயறு வகைகளைச் சேர்த்து உண்பதும் மூளை ஆரோக்கியத்துக்கு உகந்தது. முழுதானியங்களும் பருப்பு வகைகளும் கூட்டு மாவுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகின்றன.

அமெரிக்க வேளாண்மைத் துறையின் 2025ஆம் ஆண்டு முறையான மறுஆய்வின்படி, காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், கடலை வகைகள், மீன் மற்றும் நிறைவுறாக் கொழுப்புகள் அதிகமாகவும், சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் சர்க்கரை பானங்கள் குறைவாகவும் உள்ள உணவுமுறையானது, வயது தொடர்பான நினைவிழப்பு நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தயிரும் பெர்ரி பழங்களும் எளிய காலை உணவாகவோ அல்லது சிற்றுண்டியாகவோ கட்டியான தயிருடன் பெர்ரி பழங்கள் மற்றும் ஒரு கைப்பிடி கடலைகளைச் சேர்த்து உட்கொள்ளலாம்.

இது புரதம், ஆரோக்கியமான கொழுப்புகளை ஒரே வேளையில் அளிக்கிறது. தனிப்பட்ட பொருள்களுக்கு முக்கியத்துவம் தருவதைவிட, குறைந்த அளவில் பதப்படுத்தப்பட்ட, ஊட்டச்சத்துகள் நிறைந்த பல்வேறு உணவுகளை அடிப்படையாகக் கொண்டு உணவை அமைப்பதே முதன்மையான கொள்கையாகும்.

அதேநேரத்தில், ஒரு முக்கிய உண்மையை நினைவில் கொள்ள வேண்டும். எப்போதாவது விஷயங்களை மறந்துவிடுவது என்பது உங்களது உணவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்பதை உடனடியாகக் குறிக்காது.

தூக்கமின்மை, மன அழுத்தம், மருந்துகள், மதுப்பழக்கம் மற்றும் சில மருத்துவ நிலைமைகளும் கவனத்தையும் நினைவாற்றலையும் பாதிக்கலாம். எனவே, ஏதேனும் ஒரு அற்புத உணவைத் தேடுவதற்குப் பதிலாக, இதய ஆரோக்கியத்துக்கு ஆதரவளிக்கும் வண்ணமயமான, சமச்சீரான உணவுமுறையைப் பின்பற்றுவதே வயதாகும் மூளையின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் சிறந்த வழியாகும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்